வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (03/08/2017)

கடைசி தொடர்பு:14:47 (03/08/2017)

ஆடிப்பெருக்கில் பெருகும் மகசூல்!

 

ஆடிப்பட்டம்

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பார்கள். மழையை நம்பி மானாவாரியாக விதைக்கும் விவசாயிகளாகட்டும், இறவை பாசன விவசாயிகளாகட்டும் இரண்டு முறையிலும் விதைப்பதற்கு ஆடி மாதம் சிறப்பான மாதம். இந்த மாதத்தில் விதைத்தால் தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் கிடைக்கும் மழையை வைத்து, பயிர் வளர்ந்துவிடும் என்பதால், ஆடி மாதத்தில்தான் பெரும்பாலான விவசாயிகள் விதைப்பார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகப் போதுமான மழையில்லாமல் விதைக்க முடியாமல் வேதனையில் இருந்த விவசாயிகள் வயிற்றில் பால்வார்த்துள்ளது சமீபத்தில் பெய்த மழை. 

வழக்கமாக ஆடி மாதம் முதல் தேதி அன்று பொன் ஏர் பூட்டி நிலத்தை உழவு செய்வார்கள். முன்னாள் ஒருவர் விதைத்துக்கொண்டே போக, அவருக்கு பின்னால் வரிசையாக, உழவு மாடுகள் அணிவகுத்து செல்லும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். ஆனால், சமீபகாலமாக மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொன்னேர் உழவைக் காண்பது அரிதாகி விட்டது. பெரும்பாலும் டிராக்டரைப் பயன்படுத்திதான் உழவு செய்து வருகிறார்கள். மானாவாரி நிலங்களில், இருங்கு சோளம், மொச்சை, துவரை, தட்டைப்பயறு, உளுந்து, பாசிப்பயறு போன்றவற்றை விதைப்பார்கள். இந்நிலையில், ஆடி மாதம் ஒன்றாம் தேதி விதைக்க முடியாத நிலையில், ஆடிப்பெருக்கான இன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக விதைக்கும் பணி நடந்து வருகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு, மழை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் நிலங்களை உழவு செய்து விதைத்து வருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க