‘தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் பேரம் பேசுகிறார்கள்!’ - சண்முகநாதன் எம்.எல்.ஏ., ‘ஸ்பெஷல்’ பேட்டி #VikatanExclusive

 ஓ.பன்னீர்செல்வம்,சண்முகநாதன் எம்.எல்.ஏ.

‘பன்னீர் செல்வம் அணியில் இருந்து, தங்கள் அணிக்கு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் இருவரது தரப்பிலிருந்தும், 5 கோடி ரூபாய் பேரம் பேசியதாக’ முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ தெரிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க., இரண்டு அணிகளாகப் பிரிந்தது. சசிகலா அணியினர் ஆட்சி அமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடத்தினர். கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றி, கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்றனர். செல்லும் வழியில், ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்தவர்,  தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன். ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து இன்னும் சிலர் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியானது. 

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் மற்றும் தினகரன் தரப்பிலிருந்து தன்னையும் அணிமாறச் சொல்லி 5 கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ பேட்டியளித்தார். அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். 

உங்களை அணி மாறச் சொன்னது யார்?

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன் தரப்பைச் சேர்ந்தவர்கள், நேரிலும் போனிலும் என்னை அணிமாறச் சொல்லி பேரம் பேசினார்கள். 5 கோடி ரூபாய் தருவதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக என்னிடம் நிறைய பேர் பேசியுள்ளனர்."

5 கோடி ரூபாய் பேரம் எப்படி நடந்தது?
 
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன் தரப்பைச் சேர்ந்தவர்கள் மூலம்தான் பேரம் நடக்கிறது. போனிலும் பேசுகிறார்கள்; நேரிலும் பேசுகிறார்கள்." 

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ-வுக்குப் பணம் கொடுத்ததால்தான் அவர் அணி மாறினாரா? 

பணம் வாங்கியதை ஆறுக்குட்டியிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். 122 எம்.எல்.ஏ-க்களும் பணம் வாங்கவில்லை என்றுதான் சொல்வார்கள். பணம் கொடுக்கவில்லை என்றால், கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களை ஏன் அடைத்துவைத்திருக்க வேண்டும்? பணம் வாங்கியதாக சந்தேகப்படும் எம்.எல்.ஏ-க்களை போலீஸ் கண்காணித்தாலே கண்டுபிடித்துவிடலாம்." 

அணிகள் இணைவது எப்போது?

 "அணிகள் இணைவதைத் தலைவர்கள் முடிவுசெய்வார்கள். நான் எப்போதும் ஓ.பன்னீர்செல்வம் அணியில்தான் இருப்பேன்."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!