Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"இணையும்... ஆனா இணையாது!" - என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில்?

அ.தி.மு.க. -  தினகரன்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, இந்தியாவின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்த அ.தி.மு.க, இன்று ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என பல அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவர் பெற்றுத்தந்து சென்றுள்ள தமிழக ஆட்சி அதிகாரத்தைக் கைவிட முடியாமல், அரசில் உள்ள அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுத்து, மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுவதால், தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கவுன்சலிங் தொடங்காதது உள்பட எத்தனையோபிரச்னைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்தான், ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குச் செல்லவிருப்பதாகவும், தான் அளித்திருந்த காலக்கெடு முடிந்து விட்டதாகவும் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். இதையடுத்து, எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவசரமாகக் கூடி, திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். 'ஓ.பி.எஸ். அணியுடன் இணைப்பு குறித்து பேசுவார்கள்' என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கூட்டத்தில் எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். ஆனாலும், எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைவது தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது போன்ற நிலைதான் நீடிக்கிறது.

அ.தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இணைப்பு குறித்த தற்போதைய நிலை என்னவோ, நடிகர் வடிவேலுவின் காமெடிக் காட்சியைப் போன்றுதான் நீடிக்கிறது. தொட்டால் பூ மலரும் படத்தில், "வரும்... ஆனா வராது.." என்கிற வசனத்தைப் போன்று, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும், "இணையும்....ஆனா... இணையாது" என்றரீதியில்தான் நிலைமை சென்று கொண்டிருக்கிறது.

இதனிடையே, பெங்களூரு சென்று சிறையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளரைச் சந்தித்து விட்டு திரும்பியுள்ளார் டி.டி.வி. தினகரன். அ.தி.மு.க-வில் கடந்த சில மாதங்களாகவே அதிரடியான நிகழ்வுகள் நடந்தேறிய போதிலும், தினகரனின் இந்தச் சந்திப்பு, மற்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் மாற்றாக, சற்றே முக்கியமான சந்திப்பாக அமைந்துள்ளது என்றே கூறலாம். சசிகலாவைச் சந்தித்த பின்னர், தினகரன் உற்சாகமாக பேட்டியளித்ததில் இருந்தே இதனை உணர முடிந்தது.

சசிகலாவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தினகரன், "அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்குச் செல்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது. இரண்டு மாதம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சசிகலா என்னிடம் தெரிவித்திருந்தார். தற்போது, இரண்டு மாத காலம் முடிவடைந்து விட்டது. நான் அ.தி.மு.க-வில் தொடர்ந்து நீடிக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை வளர்க்கத் தயாராகி வருகிறேன். கடந்த மூன்று மாதங்களாக, கட்சிப் பணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும். நான் கட்சி அலுவலகத்துக்குச் செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அ.தி.மு.க-வின் அணிகள், இணைப்புக்குப் பாடுபடுவேன். என்னைப்பற்றி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்து போர் அடித்து விட்டது. சசிகலாவுக்கு சிறையில் எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை. பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய கர்நாடக போலீஸ் அதிகாரி ரூபா மீது வழக்குத் தொடரப்படும்’’ என்றார்.

அ.தி.மு.க. - ஓ.பன்னீர்செல்வம்மேலும் 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் தனக்கு இருப்பதாக தினகரன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இது, எடப்பாடி தரப்புக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'உண்மையில் தினகரனின் எதிர்காலத் திட்டம் என்ன?' என்பது ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகே தெரிய வரும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு, நிகழ்வுகளை உன்னிப்புடன் கவனித்து வருகிறது.

சசிகலாவைச் சந்தித்து விட்டுப் பேட்டியளித்த தினகரன் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். தினகரனின் பிளானுக்கு சசிகலா ஒப்புதல் அளித்து விட்டதையே இது காட்டுவதாக தினகரனுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

'ஓ.பன்னீர்செல்வம் அணியையும், எடப்பாடி பழனிசாமி அணியையும் ஒன்றிணைத்து, இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்று, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம்' என பி.ஜே.பி. திட்டமிட்டுள்ள நிலையில், தினகரனின் அதிரடி பிளான், எடப்பாடி தரப்புக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில் நடக்கும் இதுபோன்ற அதிகார மோதல்கள் எதுவும் தெரியாமல், அக்கட்சியின் சாமான்யத் தொண்டர்கள் குழம்பிப் போய் உள்ளனர். 

'என்னதான் நடக்கப்போகிறது?' என்பதை தொண்டர்களுடன் சேர்ந்து நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement