தனுஷ் கேரவனுக்காக எடுக்கப்பட்டதா முறையற்ற மின்சாரம்..?!

குல தெய்வ வழிபாட்டுக்காக தேனி மாவட்டத்துக்கு வந்த நடிகர் தனுஷின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட கேரவனுக்கு, அனுமதியில்லாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் நடிகர் தனுஷ். அதன்பின்னர், தனது பாட்டனார் பிறந்த ஊரான ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் இருக்கும் கஸ்தூரி மங்கம்மாள் கோயிலுக்கு வழிபட வந்தார். அவரது தந்தைவழி குல தெய்வமான இக்கோயிலில் வழிபாடு நடத்தினார் தனுஷ். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த நடிகர் தனுஷின் பயன்பாட்டுக்காக ஏ.சி வசதியுடன் கூடிய கேரவன் வேன் ஒன்றும் வந்தது. கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற தனுஷ், அங்கே பத்து நிமிடம் தியானம் செய்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு, அந்த கேரவனுக்குள் சென்று குட்டித்தூக்கம் போட்டார். அப்போது ஊர் மக்கள் அனைவரும் அவரைக் காண கேரவனுக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது சிறுவர்கள் அங்கும் இங்கும் விளையாடிக்கொண்டிருந்தபோது, கேரவனுக்காக மின்சார இணைப்பு கொடுத்த வயரில் கால் தடுமாறி கீழே விழுந்தனர். அதனைக் கண்ட ஊர் பொதுமக்கள், அந்த வயர் எங்கே செல்கிறது எனக் கவனித்தனர். ஊர் பொது மின் கம்பத்துடன் அந்த வயர் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தனுஷ் கோயிலுக்கு வர இருப்பதால் காலை எட்டு மணிக்கே இந்த கேரவன் வந்ததாகவும், அப்போது இருந்தே ஊர் பொது மின் கம்பத்தில் இருந்துதான் மின்சாரம் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 

இந்த விவகாரம் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குள், தனுஷ் கிளம்பிவிட்டார். தகவலறிந்த ஆண்டிபட்டி மின்சார வாரியத்தின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். ஆய்வுக்குப் பிறகு பேசிய அதிகாரி ராஜேஷ், " கேரவனுக்காக 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த கேரவன் இயக்கப்பட்டு இருக்கிறது. முறையற்ற வகையில் மின்சாரம் எடுத்ததன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட உள்ளது" என்றார். 

dhanush

இதையடுத்து, கேரவன் ஓட்டுநருக்கு ரூ.15,670 அபராதம் விதித்து, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!