‘'தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் தூங்க வேண்டும்!’’ - சொல்கிறார், மகளிர் மருத்துவர் நித்யா #WorldBreastFeedingWeek | "Breastfeeding women have to sleep for at least five hours!" says doctor Nitya

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (03/08/2017)

கடைசி தொடர்பு:21:00 (03/08/2017)

‘'தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் தூங்க வேண்டும்!’’ - சொல்கிறார், மகளிர் மருத்துவர் நித்யா #WorldBreastFeedingWeek

 

தாய்ப்பால்

த்து மாதங்கள் தன் உயிரோடு விளையாடி உருவான அந்தக் குட்டிச் செல்லம் மண்ணில் பிறந்ததும், தாயின் மார்புகளே குழந்தைக்கு அமுதசுரபி, அடைக்கலம் எல்லாமே. பசிக்கும் கதகதப்புக்கும் தாயின் மார்புகளைத் தேடி அடையும் அந்தச் செல்லம். தாய்ப்பால் கொடுப்பது ஒவ்வொரு தாய்க்குமே இனிய அனுபவம். ''தாய்ப்பால் கொடுப்பதன் வழியாகத் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் பாசப்பிணைப்பு அதிகரிக்கிறது'' என்கிறார் மகளிர் சிறப்பு மருத்துவர், நித்யா ராமமூர்த்தி.

 

தாய்ப்பால்

‘‘இன்றைய பெண்களிடம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. தாய்மார்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறோம். இதனால், தாய்ப்பால் கொடுப்பதற்கு பெண்கள் தயக்கம் காட்டுவதில்லை. பிறந்த குழந்தைக்குக் கிடைக்கவேண்டிய முதல் ஊட்டச்சத்து உணவுதான் தாய்ப்பால். குழந்தைப் பிறந்ததும் கொடுக்கப்படும் சீம்பாலில், அதிகளவில் நோய் எதிர்ப்புசக்தி இருக்கிறது. நீண்ட நாள்களுக்கு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன், அறிவிலும் சிறந்து விளங்குகிறார்கள். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்களின் அளவும் மாறுகிறது. 

குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்துக்குள் கொடுக்கப்படும் தாய்ப்பால், மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் கொலஸ்ட்ரோம் உள்ளது. இந்தப் பால்தான் அதிகச் சத்துகள் நிறைந்தது. குழந்தை பிறந்த மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, தாய்ப்பால் நீர்மமாக இருக்கும். குழந்தை பிறந்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குப் பிறகே, தாய்ப்பாலில் அடர்த்தி உண்டாகும். தாய்ப்பாலின் தன்மை குழந்தையின் ஜீரணத்துக்கும் தேவைக்கு ஏற்ப கிடைக்கிறது. ஆறு வாரங்களுக்குப் பிறகு, தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான ஆன்டிபயோடிக் அதிகரித்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் கலோரிகள் தாய்ப்பாலில் அதிகரித்திருக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பாலில் ஒமேகா அமிலங்கள் அதிகரித்திருக்கும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குப் பேருதவியாக இருப்பது தாய்ப்பாலே. 

தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் பெண்களுக்குப் போதிய ஓய்வும் தேவைப்படுகிறது. குழந்தை பிறந்து மூன்று மாதம் வரை சரியான தூக்கம் இருக்காது. பால் கொடுக்கும் பெண்கள், இரவில் ஐந்து மணி நேரம் தூங்கவேண்டியது மிகவும் அவசியம். போதிய சத்துள்ள உணவுகளைத் தாய் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தாயும் போதுமான அளவு பால் குடிப்பது அவசியம். ஓட்ஸ், மீன் ஆகியவையும் பால் சுரப்பை அதிகரிக்கும். 

அடுத்த முக்கியமான விஷயம், சுகாதாரம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும் மார்கபக் காம்புகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். மார்பகக் காம்புகளில் வெடிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று ஆயின்மென்ட் பயன்படுத்தலாம். அதைச் சுத்தமாக கழுவித் துடைத்த பிறகே, குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் பால் கொடுப்பதன்மூலம், மார்பகத்தில் பால் கட்டிக்கொள்வதைத் தடுக்கலாம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாயிடமிருந்து வேறு வழிகளில் தாய்ப்பால் சேகரித்து, எக்ஸ்பிரஸ்டு மில்க்காக தரப்படுகிறது. 

குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் கருப்பைச் சுருங்கும். பால் கொடுக்கும்போது, கருப்பை இயல்பாகச் சுருங்க ஆரம்பிக்கிறது. மேலும், தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாய் வேறு நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால், கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலைச் சேகரித்து ஃபிரிட்ஜில்வைத்து குழந்தைக்குக் கொடுக்கலாம். வெளியில் எடுத்து இயல்பு வெப்பநிலைக்கு வந்த பிறகு கொடுக்க வேண்டும். ஒரு சில அலுவலகங்களில் வேலைக்கு இடையில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கான ரெஸ்ட் ரூம்கள் இருக்கும். வீட்டில் குழந்தையைப் பராமரிப்பவர்கள், குழந்தையை அலுவலகத்துக்குத் தூக்கிவந்து தாய்ப்பால் கொடுத்த பிறகு அழைத்துச்செல்லும் வசதிகளும் இன்றைய காலகட்டத்தில் உண்டு. எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டாம்'' என்கிறார், மருத்துவர் நித்யா ராமமூர்த்தி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்