Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவைத்த அதிசயம்!

கடந்த ஆண்டு வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படித்த அரசு நடுநிலைப் பள்ளிக்கு மூடுவிழா நடந்திடுமோ என்று அஞ்சிய வேலையில், தற்போது அதே பள்ளி 145 மாணவர்களைக் கொண்டு ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.  

எப்படி சாத்தியம்? 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குத் தரமான கல்வி, கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, புத்தகங்கள், நோட்டுகள், விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, இலவச காலணி, பஸ் பாஸ் போன்ற பல வசதிகள் வழங்கப்பட்ட போதிலும், தனியார் பள்ளிகளின்மீது உள்ள மோகத்தால் பல அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரத்துடன் இல்லை என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிவிடுகின்றனர்.  

இச்சூழ்நிலையில், நாகை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2004-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு மீனவ மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாகத் திகழ்ந்தது. நாளடைவில் அருகில் தனியார் பள்ளிகள் புற்றீசலாகத் தோன்ற ஆங்கில மோகத்தால் அப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தனர். இதனால் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து கடந்த ஆண்டு வெறும் 3 மாணவர் மட்டுமே பயிலும் பள்ளியாகச் சுருங்கியது.  

இதனையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் அன்பழகன் முயற்சியில் தற்போது இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. இதுபற்றி அன்பழகனிடம் கேட்டபோது, பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் கல்விக் குழு அமைத்தோம். இக்குழு பள்ளியின் முன்னேற்றத்துக்கு என்னென்ன செய்யலாம்? என்று ஆராய்ந்தார்கள். தனியார் பள்ளிகளைப் போன்று யோகா, கராத்தே, ஆங்கில பயிற்சி உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள், கணினி, ஸ்மார்ட் கிளாஸ், சுத்தமான கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சுவர், பள்ளிக்கு மாணவர்களை வீடுகளிலிருந்து அழைத்துவர வாகனவசதி, அனைத்து விளையாட்டுகளுக்கும் உரிய பொருள்கள் ஆகியவற்றையெல்லாம் தங்கள் கிராம பொது நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் ஒதுக்கீடுசெய்து அதன்மூலம் செய்துகொடுத்தார்கள்.  அதுமட்டுமல்ல, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ.4 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையாகக் கிராமம் சார்பில் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக நவீன வசதிகளுடன் இந்த அரசுப் பள்ளி இயங்குவதால் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.  

அரசை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் கிராம மக்களே பள்ளியின் தரத்தை உயர்த்தியிருப்பது அனைத்து கிராமங்களும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement