வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (03/08/2017)

கடைசி தொடர்பு:19:07 (03/08/2017)

அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியா..? அமித்ஷா வருகையின் பின்னணி இதுதான்!

பி.ஜே.பி தேசியத் தலைவரான அமித்ஷாவின் வருகை, தமிழக பி.ஜே.பி-யைப் பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. மத்தியில் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆனநிலையில், இதுவரை தமிழகத்தில் கட்சியை வளர்க்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... கட்சித் தலைமையிடம் தமிழக பி.ஜே.பி-யினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா... போன்றவை குறித்து ஆலோசனை நடத்த வருகிறார் அமித்ஷா. அதோடு, பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி குறித்தும் நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்க இருக்கிறார்.

அதிமுக

நாடாளுமன்றத் தேர்தலை 2019-ம் ஆண்டு எதிர்கொள்வதற்குக் கட்சியைத் தயார்படுத்த நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணத்தை மே 29-ம் தேதி காஷ்மீரில் அமித்ஷா தொடங்கினார். மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, பாண்டிச்சேரி என்று ஒவ்வொரு மாநிலமாகச் சென்று வருகிறார். மே 10-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் தமிழகச் சுற்றுப்பயணத்தை அமித்ஷா தயார்செய்து வைத்திருந்தார். தமிழக நிர்வாகிகளும் அமித்ஷாவை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆனால், திடீரென்று அந்தப் பயணத்தை ரத்துசெய்துவிட்டார் அமித்ஷா. இந்த நிலையில், இரண்டு மாதம் கழித்து இப்போது மீண்டும் தமிழகம் வருகிறார். ஆகஸ்ட் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அவர் தமிழகத்தில் தங்கி ஆலோசனை நடத்தயிருக்கிறார்.

இதுகுறித்து அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர், '' 'தமிழகத்தில் கோடி உறுப்பினர்களைச் சேர்ப்போம்... மோடி ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்தைத் தமிழக பி.ஜே.பி பொதுக்குழுவில் அறிவித்தார்கள். அந்த இலக்கை அடைந்துவிட்டார்களா... என்பது குறித்து அமித்ஷா ஆய்வுசெய்வார். சட்டமன்றத் தொகுதிகளின் பூத் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள், நாடாளுமன்றத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து ஆய்வுகள் நடக்கும். மாநில நிர்வாகிகள்மீது டெல்லியில் குவிந்துள்ள புகார்கள் குறித்தும் நேரில் விளக்கம் கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிவாரியாகத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து எல்லாம் இந்தப் பயணத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. 

மேலும் கட்சி நிர்வாகிகள், முழுநேரத் தொண்டர்கள் என்று பட்டியலை வாங்கி அதில் குறிப்பிட்டச் சிலரைச் சந்திக்கவும் திட்டம் வைத்துள்ளர் அமித்ஷா. அந்தச் சந்திப்பின்போது, மாநில நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து கருத்துகளைக் கேட்க இருக்கிறார். மேலும், மத்திய அரசின் திட்டங்கள், தீனதயாள் உபாத்யா, ஷியாம் பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் போன்ற தலைவர்களைப் பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் பேச இருக்கிறார். கட்சியினரோடு நடக்கும் தனது உரையாடலை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து கூற டெல்லியில் இருந்து ஒரு டீமைத் தன்னுடன்  அழைத்துவருகிறார் அமித்ஷா. அவர்கள், தமிழகச் சுற்றுப்பயணத்தில் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் அப்படியே டைப் செய்து டெல்லிக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார்கள். இந்தப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள்தான் தமிழக பி.ஜே.பி-யில் அதிரடி மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும்'' என்கிறார்கள். 

அமித்ஷா

இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் பி.ஜே.பி-யோடு கூட்டணி வைக்கத் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களோடு கூட்டணி வைத்தால், ஏற்படும் சாதக, பாதக விவரங்களையும் மாநில பி.ஜே.பி நிர்வாகிகளிடம் கேட்டு அறிய இருக்கிறார். இரு அணிகளையும் இணைத்தபிறகு கூட்டணியா அல்லது தனித்தனியா என்பது குறித்தும் ஆலோசனை கேட்க இருக்கிறார் என்கிறார்கள். மேலும், அவர்களோடு கூட்டணிவைத்தால் மத்திய மந்திரி சபையில் அவர்களுக்கு இடம்கொடுப்பது குறித்தும் முக்கிய முடிவெடுப்பார் என்றும் சொல்கிறார்கள். கட்சியில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசியலில் அமித்ஷாவின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை கூறுகையில், ''ஆகஸ்ட் 22 - 24 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு அமித் ஷா வருகை தருவது எங்களுக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. தேசிய தலைவரை வரவேற்க உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்