வீரத்தால் எழுதப்பட்ட தீரன் சின்னமலையின் வரலாறு!

chinnamalai, சின்னமலை

சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என அத்தனை வீரவிளையாட்டுகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் அந்த இளைஞன். தனது வீரத்தாலும், அசாத்திய திறமைகளாலும் தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தையும் தாண்டி அவரது பெயர் பரவத்தொடங்கியது. ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத் தொடங்கிய அந்த வீரக்குரல், ஒருகட்டத்தில் இந்தியாவையே கட்டியாண்ட ஆங்கிலேயரையே அதிரச் செய்தது. அந்த விடுதலை வீரரின் பெயர் தீரன் சின்னமலை

‘தீர்த்தகிரி’ என்ற இவரது இயற்பெயர் ‘சின்னமலை’ என மாற்றம் அடைந்ததற்கு சில வரலாறுகள் கூறப்படுகின்றன. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த நேரம். மைசூர் அரசால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி, அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப்பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரனிடம், ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’, எனக் கூறினாராம். அன்றிலிருந்து, தீர்த்தகிரி ‘சின்னமலை’ என அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சின்னமலை, chinnamalai

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர் தீரன் சின்னமலை. 1782-ல் மைசூரை ஆண்ட ஹைதர் அலி மறைவுக்குப் பின்னர் அரசராக பதவியேற்றார் அவரது மகன் திப்பு சுல்தான். மேலும், ஆங்கிலேயர்களுடன் தொடர் யுத்தத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார். திப்புவிடம் நன்மதிப்பு பெற்றிருந்த தீரன் சின்னமலை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வேரறுக்க, திப்பு படையினருடன் கைகோத்தார். கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த தீரன் சின்னமலை, பயிற்சி பெற்ற இளைஞர் படையுடன் மைசூர் விரைந்தார். மைசூர் போர்களில் ஆங்கிலேயரை திப்பு சுல்தானின் படையினர், திணறடித்து வெற்றி வாகைச் சூடிட முக்கிய பங்காற்றியது சின்னமலையில் கொங்குப் படை. சித்தேஸ்வரம், மழவல்லி, ஶ்ரீரங்கப்பட்டினம் பகுதிகளில் நடந்த போர்களில் திப்புவுடன் கூட்டணி அமைத்து திறம்பட போரிட்டார் சின்னமலை. 1799-ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், களத்திலேயே மரணமடைந்தார் திப்பு சுல்தான். 

திப்புவின் மரணத்துக்குப் பின்னர், அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டைக் கட்டிய சின்னமலை, பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்கினார். திப்பு படையில் இருந்தபோது, தனக்கிருந்த நட்புகளையும், போரில் ஈடுபட்டவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார் சின்னமலை. ஃபிரெஞ்சு நாட்டவர்களுடன் இணைந்து பீரங்கிகளை தயார் செய்யும் பணியில் முழுவீச்சாக இறங்கினார். திப்புவின் படையில் முக்கிய வீரராக அறியப்பட்ட தூண்டாஜிவாக் மற்றும் பரமத்தி அப்பாச்சி, விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 1800-ம் ஆண்டு கோவைக் கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார் சின்னமலை. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தன் முயற்சியைக் கைவிடாத சின்னமலை பிரிட்டிஷாரை தாக்குவதற்கு நேரம் எதிர்பார்த்து காத்திருந்தார். 1801-ம் ஆண்டில் பவானி - காவிரிக் கரையில் நடைபெற்ற போரில் தன் முழுபலத்தையும் பிரயோகித்து ஆங்கிலேயப் படைகளை துவம்சம் செய்தார். 1802-ல் சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே நடந்த போரிலும், 1804-ல் அரச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையையும் வென்று வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தார் சின்னமலை. பீரங்கி ப்ரயோகம், குறிவைத்து கையெறி குண்டுகள் வீசுதல் என சின்னமலையின் போர் யுத்திகளைக் கண்டு பிரிட்டிஷார் கலங்கி நின்றனர். அவர்களுக்கு, சிம்மசொப்பமனமாகிப் போனார் சின்னமலை.

சிலம்பம், வாள் வீச்சு என தான் கற்றுத்தேர்ந்த தற்காப்புக் கலைகள் மூலம் தன்னையும், படைத் தளபதிகளையும் தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவாராம் சின்னமலை. 1802-ம் ஆண்டு நடந்த போரின்போது சின்னமலையின் அதிரடி சிலம்பாட்டம் குறித்து இன்றைக்கும் கொங்கு மண்டலத்துக்காரர்கள் சிலாகித்து பேசுவதுண்டு. 

தீரன் சின்னமலை, chinnamalai

வீரத்தை, சூழ்ச்சியால் வீழ்த்துவதுதானே வழக்கம். அதேதான், தீரன் சின்னமலையின் வாழ்க்கையிலும் நடந்தது. சின்னமலையை சிக்க வைக்க திட்டமிட்ட ஆங்கிலேய அரசு, அவரின் சமையல்காரர் மூலம்  வலைவிரித்தது. இறுதியாக அவரது சகோதரர்களுடன் கைது செய்யப்பட்டார் தீரன் சின்னமலை. எந்த சங்ககிரியில் தனது முதல் ‘வேட்டை’யை சின்னமலை துவக்கினாரோ… அதே சங்ககிரியில் உள்ள மலைக் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீரன் சின்னமலை 1805-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். 

பெரும் படையுடனும், செல்வாக்குடனும் வலம் வந்த ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையை கடைசி வரை நேரடியாக போரிட்டு வெல்ல முடியவில்லை என்பதே வீரத்தமிழர் வரலாறு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!