வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்! | Minister Vijayabaskar appeared before Income tax department

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (03/08/2017)

கடைசி தொடர்பு:20:10 (03/08/2017)

வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்!

சென்னை, வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜரானார்.

விஜயபாஸ்கர்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். 


மேலும், விஜயபாஸ்கரிடம் பல தடவை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை வருமான வரித்துறையினர் கேட்டனர். இதையடுத்து விஜயபாஸ்கர் குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலங்கள், குவாரிகள் உள்ளிட்ட சொத்துகள் நேற்று முன்தினம் முடக்கப்பட்டது. அவருக்கு வருமானவரித்துறையினர் இன்று மீண்டும் சம்மன் அனுப்பினர்.

விஜயபாஸ்கர்

இதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜரானார். அவரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப்பிறகு அவர் செய்தியாளர்களிடம், "அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பேன். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்று சோதனை வருவது இயல்புதான்" என்று கூறினார்.


[X] Close

[X] Close