வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (03/08/2017)

கடைசி தொடர்பு:19:47 (03/08/2017)

''இனிமேல் மு.க.ஸ்டாலினிடம் கேட்டே செய்கிறோம்'' - ஹெச்.ராஜா நையாண்டி

மிழக அரசியல் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது! பிளவுப்பட்டு நிற்கும் அ.தி.மு.க அணிகள் ஒன்றிணையுமா? நீட் தேர்வுக்கு  விலக்கு கிடைக்குமா? உள்ளாட்சித் தேர்தலில், யார் யாரோடு கூட்டணி அமைக்கப்போகிறார்கள்? என்பது போன்ற பல கேள்விகளும் ஒன்றுக்கொன்று சிக்கிக்கொண்டு கிடப்பதால், இப்போதுவரையிலும் சிக்கல் தீர்ந்து விடை கிடைத்தபாடில்லை.

இந்நிலையில், அப்துல்கலாம் மணி மண்டபத் திறப்பு விழாவுக்காக தமிழகம் வருகை தந்த, பிரதமர் மோடியிடம், 'தமிழகத்தில் நிலவிவரும் நீட் தேர்வு விவகாரச் சிக்கல்' குறித்துப் பேசப்பட்டுள்ளது. உடனே, தமிழக பி.ஜே.பி தலைவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார் மோடி. இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன், இல.கணேசன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு நீட் தேர்வு குறித்த தங்களது கருத்துகளை எடுத்துவைத்துள்ளனர். 

அமித்ஷா

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கப்படுமா? அல்லது தொடர்ந்து நீட் தேர்வு முறையே அமலாக்கப்படுமா? என்ற பரபரப்பான இந்தச் சூழ்நிலையில், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா, வருகிற 22-ம் தேதி தமிழகம் வருகிறார். 22, 23, 24 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், இங்கே கட்சியைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என அறிவித்துள்ளது தமிழக பி.ஜே.பி.! அதே சமயம், நீட் தேர்வு பிரச்னையில் ஆரம்பித்து தமிழக அரசியல் சிக்கல்கள் பலவற்றுக்கும் விடைகாணும் முயற்சியாகவே அமித்ஷாவின் தமிழகப் பயணம் இருக்கப்போவதாகவும் செய்திகள் அலையடிக்கின்றன.

இதற்கிடையில், குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், கட்சி மாறி ஓட்டளித்துவிடக்கூடாது எனக் கருதிய காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் உள்ள தனது எம்.எல்.ஏ-க்களை பெங்களூருவில் தங்கவைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களது வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டுகளை நடத்திவருகிறது. இது அப்பட்டமான எதேச்சதிகாரம் என்று மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.

மத்திய பி.ஜே.பி குறித்து வெளிவரும் செய்திகள் மற்றும் அரசுக்கு எதிராகக் கிளம்பும் செய்திகளின் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்துகொள்ள அக்கட்சியின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவிடம் பேசினோம்...

ஹெச்.ராஜா

''அமித்ஷா, தமிழகம் வருகை தருவதன் நோக்கம் என்ன?''

''தமிழகப் பி.ஜே.பி-யின் அமைப்பு ரீதியிலான பணிகளைக் கவனிக்கவும், கட்சியைப் பலப்படுத்துவது குறித்த ஆலோசனைக்காகவும் வருகை தரவுள்ளார். மேலும், பாராளுமன்றத் தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.''

''நீட் தேர்வு விவகாரம் குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே...?''

''அமித்ஷா வருகிற 22-ம் தேதிதான் தமிழகம் வருகை தரவுள்ளார். அதற்குள்ளாகவே நீட் தேர்வு விவகாரத்தில் தீர்வு கிடைத்துவிடும்.''

''நீட் தேர்வு விஷயத்தில், தமிழக அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம், தமிழக மாணவர்களின் நிலை உள்ளிட்டப் பிரச்னைகள் குறித்து தமிழக பி.ஜே.பி தலைவர்கள் டெல்லியில் நடத்திய ஆலோசனையின் முடிவு என்ன?''

''நம்ம பக்கத்து கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி முடிவு என்பது அரசாங்கம்தானே எடுக்கவேண்டும். தமிழக அரசு கேட்பதுபோல், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கிடைக்குமா அல்லது தற்காலிக விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் இன்று அல்லது நாளைக்குள்ளாகவே விடை கிடைத்துவிடும். அதனால், இதற்கும் அமித்ஷா வருவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.''

''பெங்களூரு ரிசார்ட்டில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை, கூவத்தூரில் ஏன் ரெய்டு நடத்தவில்லை... என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?''

''தமிழ்நாட்டில் பல ரெய்டுகள் நடந்திருக்கின்றன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்கூட ரெய்டு நடந்திருக்கிறது. அதனால், இந்த ரெய்டுகளுக்கும் கூவத்தூருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்ப நடக்கிற ரெய்டுக்கும் கர்நாடகாவுக்கும் சம்பந்தம் இல்லை. இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் அவர்களுக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறார்கள்.... அவ்வளவுதான்.''

மு.க.ஸ்டாலின்

''கூவத்தூரில், எம்.எல்.ஏ-க்கள் அடைபட்டுக் கிடந்த நாட்களில், வருமான வரித்துறை எந்த சோதனையும் நடத்தாமல் இருந்ததற்கான காரணம் என்ன?''

''இதிலிருந்தே தெரிகிறதா.... இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று! சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர் ஆகியோர் பற்றிய தகவல்கள் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு வந்தது... அதனால் ரெய்டும் நடந்தது. இதேபோல், இப்போது கர்நாடக மந்திரி சிவக்குமார் மீது வந்திருக்கும் தகவலையடுத்தும் ரெய்டு நடக்கிறது. இந்த ரெய்டுக்கும், எம்.எல்.ஏ-க்களை அவர்கள் சிறைப்படுத்தி வைத்திருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அதேபோல், கூவத்தூருக்கும் விஜயபாஸ்கருக்கும்கூட எந்த சம்பந்தமும் இல்லை. இது தனி... அது தனி. எனவே,  நாங்கள் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்டை இதற்கும் பயன்படுத்தவில்லை... அதற்கும் பயன்படுத்தவில்லை!''

''வருமான வரித்துறையை தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டுவித்து வருகிறது மத்திய அரசு' என்று குறிப்பிட்டு குற்றம் சுமத்தியுள்ளாரே மு.க ஸ்டாலின்?''

''இனிமேல் மு.க ஸ்டாலினிடம் கேட்டு வேண்டுமானால் எல்லாவற்றையும் செய்கிறோம்!''


டிரெண்டிங் @ விகடன்