வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (03/08/2017)

கடைசி தொடர்பு:20:43 (03/08/2017)

ஆங்கிலேயேர் கட்டடத்தை மாற்றுங்கள்! கலெக்டரிடம் கோரிக்கை வைத்த வக்கீல்கள்

ஆங்கிலேயேர் காலத்தில் கட்டிய கட்டடத்தைத்தான் நீதிமன்ற வளாகமாகப் பயன்படுத்தி வருகிறோம். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க முதல்வரிடம், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

                                 அரியலூர் நீதி மன்றம் போட்டோஸ்

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக செயல்படும் கட்டடம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இக்கட்டடத்தில் குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 7 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மகளிர் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                        அரியலூர் நீதி மன்றம்

இதனிடையே, கடந்த 2012-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க அமினாபாத் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வுசெய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர். 6 வருடமாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரும் 23-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி அரியலூர் மாவட்டத்துக்கு வருதை தர உள்ளார். அப்போது, முதல்வரிடம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகக் கட்டடம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட மாவட்ட ஆட்சியர் பரிந்துரைசெய்ய வேண்டும் என மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.