வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (03/08/2017)

கடைசி தொடர்பு:20:52 (03/08/2017)

சிவாஜி சிலை அகற்றத்தைக் கண்டித்து காங்கிரஸார் அரை நிர்வாணப் போராட்டம்!

சிவாஜி சிலை

சென்னையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து, நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியினர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை 2-ம் தேதி நள்ளிரவில் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக பல்வேறு கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ‘’தமிழகத்தில் காங்கிரஸ் என்றாலே காமராஜரும் சிவாஜி கணேசனையும்தான் ஒவ்வொரு தொண்டனுக்கும் தெரியும். அந்த அப்பழுக்கற்ற நடிகர் திலகம் சிவாஜி சிலையை ஒதுக்குப்புறமான மணிமண்டபத்தில் வைப்பது சரியாக இருக்காது. சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர் படத்தை வைத்து நூற்றாண்டு விழாக் கொண்டாடிய தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைமை இந்தப் பிரச்னையில் எந்த ஆர்வமும் காட்டாதது வருத்தம் அளிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’தனது திரைப்படங்கள் மூலமாக நாட்டுப்பற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சிவாஜி கணேசன். அவரது சிலையை, அவர் பெரிதும் நேசித்த காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நடுவே மெரினா கடற்கரையிலேயே வைக்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், ’’மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இரவில்தான் எடுப்பார்களா? மெரினா கடற்கரையில் எத்தனையோ தலைவர்கள் சிலை இருக்கையில் சிவாஜிகணேசன் சிலையை மட்டும் அகற்றியது ஏன்? அதே இடத்தில் மீண்டும் சிலையை வைக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்துவோம்’’ என அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸாரிடமும் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்ட பிரச்னை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நெல்லை மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநகரத் தலைவரான சங்கர பாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பாகத் திரண்ட தொண்டர்கள், தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

தமிழக அரசு மீண்டும் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரை நிர்வாண கோலத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர், காங்கிரஸ் நிர்வாகியான முட்டம் சிவாஜி முத்துக்குமார் என்பவர், சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் நிறுவும் வரையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிலை விவகாரம் நெல்லையில் நீருபூத்த நெருப்பாகவே இப்போதும் கனன்று கொண்டு இருக்கிறது.