கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடரும் உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 2-வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி சி.பி.எம். கட்சியினர் தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

kovilpatti cpm fasting 1

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாக இருப்பது கோவில்பட்டி. தமிழகத்திலுள்ள சுமார் 125 நகராட்சிகளில் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள சில குறிப்பிட்ட நகராட்சிகளில் கோவில்பட்டி நகராட்சியும் ஒன்று. இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 36 வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு என்பது தீராப் பிரச்னையாகவுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு முதல் தற்போதுவரை, நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றிலிருந்து  குடிநீர் கொண்டு வரப்பட்டு 20 நாளுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வருகிறது. 3 மணி நேரம் வரை விடப்பட்டு வந்த குடிநீர், கடந்த ஓராண்டாக ஒரு மணிநேரம் மட்டுமே விடப்பட்டு வருகிறது. இதிலும் ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஆகியவற்றால் குடிநீர் விநியோகமும் தடைபட்டுவிடுகிறது. ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 முதல் ரூ.10 வரை மக்கள் விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 18 மாதங்களில் முடிக்க வேண்டிய 2-வது பைப்லைன் திட்டத்தை ஆறு ஆண்டுகளாக தாமதப்படுத்தும் நகராட்சியைக் கண்டித்து, சி.பி.எம் கட்சியினர் கோவில்பட்டியில் 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
 

cpm fasting

மக்கள் சேவைக்கு முன்னுரிமை வழங்காத நகராட்சி ஆணையாளரை இட மாற்றம் செய்ய வேண்டும், குரமலை – ஊத்துப்பட்டி வரை 1,700 மீட்டர் தூரத்தில் புதிய குழாய் பதிக்கும் பணிக்கு வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். 2-வது குடிநீர் திட்டப்பணிகளுக்கான கிடப்பில் போடப்பட்டுள்ள 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும், இது தவிர, நகரில் 2-வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 82 கி.மீ தூரம் குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சியைக் கண்டித்தும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!