வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (03/08/2017)

கடைசி தொடர்பு:21:24 (03/08/2017)

நவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படுமா?    

நவோதயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக வைக்க முடியுமா என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.   


கிராமப்புற  மாணவ மாணவிகளுக்கு  தரமான கல்வி வழங்கவேண்டுமென்ற நோக்கத்தில் 1986-ம் ஆண்டு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது ஜவஹர் நவோதயா பள்ளி.  அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் இப்பள்ளிகளில், விடுதிகளில் தங்கிப் படிக்கவேண்டும். இந்தி கட்டாயம் என்பதால், தமிழகத்தில் தொடங்க  தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை.


இந்நிலையில், கிராமப்புற  மாணவர்கள் நலனுக்காக நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டுமென்று ஜெயகுமார்தாமஸ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  தமிழத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், நவோதயா பள்ளி தேவையில்லை என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. 'நவோதயா பள்ளிகளால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதால், தமிழகத்தில் தொடங்கலாமே' என்று மனுதாரர் தரப்பில் மீண்டும் கேட்கப்பட்டதற்கு, 'தமிழை பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்கினால் நவோதயா பள்ளி தொடங்க மாநில அரசு உதவும்' என்று அரசு வக்கீல் இன்று தெரிவித்தார். இதற்கு சம்மதமா என்று மத்திய அமைச்சகத்திடம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க