வெளியிடப்பட்ட நேரம்: 22:04 (03/08/2017)

கடைசி தொடர்பு:16:19 (26/06/2018)

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் உள்ள மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் தர்காவில் தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று நடந்தது.


ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான மக்கள் ஏர்வாடி தர்காவுக்கு வேண்டுதல் செய்வர். மேலும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கியிருந்து பிரார்த்தனை செய்துவந்தால் அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான மனநல காப்பகங்கள் இயங்கி வருகின்றன. 

ஏர்வாடி தர்ஹா


இந்நிலையில், இங்கு அடக்கமாகியுள்ள மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் தர்காவின் 843-ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று நடந்தது. கடந்த திங்களன்று இவ்விழா நிகழ்வுக்கான மெளலீது துவங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று (புதன்) அடிமரம் நாட்டப்பட்டது. இன்று மாலையில் சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்ட கொடியை மஹானின் தர்காவுக்கு முன்னதாக நடப்பட்டிருந்த கொடிமரத்தில் தர்கா ஹக்தர்கள் பொது மகா சபையைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏற்றினர்.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு கொடியேற்றம் 
 

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வந்திருந்த அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பாதுஷா நாயகம் ரவுலா ஷரீஃபுக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது. விழாவுக்காக வரும் யாத்ரீகர்களின் நலனுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏர்வாடி தர்கா ஆணையாளர் ஓய்வுபெற்ற நீதிபதி கே.தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு மற்றும் தர்கா ஹக்தர்கள் பொது மகா சபையினர் தெரிவித்துள்ளனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஏர்வாடி தர்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.