மணப்பாறை அருகே மாணவிகள் மர்ம மரணம்...! | two school girls students mystery death at manapparai

வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (03/08/2017)

கடைசி தொடர்பு:10:51 (04/08/2017)

மணப்பாறை அருகே மாணவிகள் மர்ம மரணம்...!

மணப்பாறை சம்பவம்

மணப்பாறை அருகே மாணவிகள் இருவர் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் செல்வி, ரதிதேவி ஆகிய இருவரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றவர்கள், நேற்று மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பள்ளியில் சிறப்பு வகுப்பு நடப்பதாகக் கருதி அவர்களின் பெற்றோர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இரவாகியும் மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி மற்றும் உறவினர்கள் நண்பர்களிடம் மாணவிகள் குறித்து விசாரித்தனர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை பள்ளியிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள இடைக்காட்டனூர் ரயில்வே தண்டவாளத்தில் காணாமல்போன இரு மாணவிகளும் காயங்களுடன் சடலமாகக் கிடந்தனர். தகவல் கேள்வியுற்று அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.

தண்டவாளத்தின் மறுபக்கம் மாணவிகளின் ஸ்கூல் பேக் கிடந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனிவிஜயா, மற்றும் டி.எஸ்.பி பன்னீர்செல்வம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மாணவிகளின் சடலங்களைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கவேல் சம்பவ இடத்திலிருந்த ஒரு மாணவியின் பையிலிருந்து அவர்கள் எழுதிய ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தனர். அக்கடிதத்தில் அதேபள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்தான் மாணவிகளின் சாவுக்குக் காரணம் என எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மீதும் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாக மாணவிகளின் பெற்றோர் தெரிவித்தனர். 

இதற்கிடையே மாணவிகளின் பையில் இருந்து எடுத்த கடிதத்தை தலைமை ஆசிரியர், வையம்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ராஜராஜன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மாணவிகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ரயில்வே போலீஸார் அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே எஸ்பி ஆனிவிஜயா, “மாணவிகள் மரணம் குறித்து விசாரித்து வருகிறோம். இரண்டு மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முறையான விசாரணைக்குப் பிறகே அனைத்தும் தெரியவரும்” என்றார்.

இறந்த மாணவி ரதிதேவியின் உறவினர் முருகேசன், “ மாணவிகள் மரணத்துடன் தலைமை ஆசிரியருக்குத் தொடர்பு இருப்பதாக எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பள்ளியில் மாணவிகளின் பெயர்களோடு மாணவர்கள் பெயரை இணைத்து அசிங்கமாக எழுவது,  மாணவிகளிடம் சில மாணவர்கள் முறையில்லாமல் நடந்துகொள்வது போன்றவற்றை தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதில் அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். இறந்த மாணவிகளின் மரணத்துக்கு நீதி வேண்டும்" என்றார்கள்.

பள்ளி மாணவிகள் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது போலீஸாரின் இறுதிகட்ட விசாரணையிலேயே தெரியவரும்


டிரெண்டிங் @ விகடன்