வெளியிடப்பட்ட நேரம்: 04:08 (04/08/2017)

கடைசி தொடர்பு:11:07 (04/08/2017)

அப்துல் கலாம் பிரசார வாகனத்தைப் பார்வையிட்ட டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர்கள்

அப்துல்கலாம் விஷன் 2020

நெல்லையில் நடந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கோவை கிங்ஸ், டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் வீரர்கள், அப்துல் கலாம் பிரசார வாகனத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு தினம், ராமேஸ்வரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அப்துல் கலாம் நினைவிடத்தைத் திறந்துவைத்தார். அத்துடன், அப்துல் கலாம்- 2020 என்கிற பிரசார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட இந்த வாகனம், 16 மாநிலங்களைக் கடந்து அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15-ம் தேதி டெல்லியைச் சென்றடையும்.

மாணவர்கள்

மதுரை, ராஜபாளையம் வழியாக தென்காசி வந்த இந்தப் பிரசார வாகனம், நெல்லை வந்து சேர்ந்தது. இங்குள்ள கல்வி நிலையங்களில் இந்த வாகனம் சென்று அப்துல் கலாமின் கனவுகளை மாணவர்களிடம் விதைக்கும் வகையில் விழிப்பு உணர்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த வாகனத்தில் ஐந்து பகுதிகள் உள்ளன. பொக்ரான் அணுகுண்டுச் சோதனை, அப்துல் கலாமின் வாழ்க்கை, இந்தியப் பாரம்பரிய அறிவியல் தொன்மங்கள், விண்வெளிக்கான பயணம், விஷன் 2020 ஆகியவை அந்தப் பேருந்தில் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.

நெல்லையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள், இந்த வாகனத்தில் உள்ள அம்சங்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், நெல்லை இண்டியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. 3-ம் தேதி நடைபெற்ற போட்டியில், ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும் லைகா கோவை அணியும் மோதின.  இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்தின் வெளியே அப்துல் கலாம் பிரசார வாகனம் வந்துசேர்ந்தது.

கிரிக்கெட் வீரர்கள்

போட்டிக்கான தயாரிப்பில் இருந்த இரு அணி வீரர்களும் அந்தப் பேருந்துக்குச் சென்று பார்வையிட்டனர். அவர்களின் சந்தேகங்களை அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டுத் தெளிவுபெற்றனர். இதுகுறித்துப் பேசிய லைகா கோவை கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது, ’’அந்தப் பேருந்தில் இருந்த அம்சங்கள் அனைவருக்கும் பெரும் படிப்பினையாக இருந்தது. நாங்கள் அனைவரும் ஒரே அணியாக அந்தப் பேருந்துக்குள் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் அவரது சாதனைகளைத் தெரிந்துகொள்ள பிரசார வாகனம் உதவியாக அமைந்தது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க