அங்கன்வாடிகளில் வழங்கும் முட்டைகள்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

'பள்ளிக் குழந்தைகளுக்குத் தரமான முட்டைகள் வழங்கப்படுகின்றதா' என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.

முட்டைகளை ஆய்வு செய்த கலெக்டர்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், தொட்டியபட்டி, காரைப்பட்டி, மணியங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் 4 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சிப் பணிகளை, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, மருங்காபுரி வட்டாட்சியர் கண்ணன், பொன்னம்பட்டி பேருராட்சி செயல் அலுவலர் சாகுல்ஹமீது ஆகியோருடன், திருச்சி மாவட்ட ஆட்சியர் இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அப்போது, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சியில், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.70 இலட்சம் மதிப்பில் வீடு கட்டும்பணி, ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பில் மேடுகாட்டுப்பட்டி, கோவில்குளம் மற்றும் சோமன்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கு புதிய ஆழ்குழாய்க் கிணறு, மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணி, ரூபாய் 24.38 இலட்சம் மதிப்பில் தாய் திட்டத்தின்கீழ் பாம்பலம்மன்கோயில் சாலையில் தார்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல பணிகளை நேரில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். 

அடுத்து, மணியங்குறிச்சி எனும் கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கும் பணி,  ரூபாய் 4 கோடியே 30 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்கவும் தரமாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, வளநாடு கைகாட்டி பகுதியில் உள்ள வீடுகளில், டெங்கு கொசு உருவாகக் காரணமாக உள்ள மூடப்படாத தண்ணீர்த் தொட்டி, தேங்காய் மட்டைகளைப் பார்த்த அவர், உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து ஆய்வுப்பணிகள் மேற்கொண்ட ஆட்சியர், காரைப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குள் சட்டென நுழைந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, முட்டை போன்றவை தரமானதாக உள்ளதா என்று ஆய்வுசெய்தார். பெரம்பலூர் பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுகிறது என நடிகர் கமல் ஹாசன் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சோதனைசெய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!