ரஜினி பயந்த சுபாவம் உடையவர் - சேதுராமன் கருத்து

'கமல் அரசியல் ஆர்வம் உள்ளவர். ரஜினியோ பயந்த சுபாவம் உடையவர். இருவரும் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்' என அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் கூறினார்.

டாக்டர் சேதுராமன்

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பசும்பொன்னில் உள்ள தேவர் ஆலயத்துக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேகம் நடத்தினோம்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால், இந்த ஆண்டு தேவர் ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம் 50 லட்ச ரூபாய் மதிப்பில் நடத்தப்படும். தேவர் குருபூஜைக்கு முதல் நாள், அக்டோபர் 29 -ம் தேதி நடத்த முடிவுசெய்துள்ளோம்.
கும்பாபிஷேகம் காரணமாக, தேவர் ஆலயம் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தேவர் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த இருப்பதால், பாரதப்பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் அழைக்க முடிவுசெய்துள்ளோம். தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக மதித்து நடந்தவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பதால், அவரது கொள்கையையும் எங்கள் கட்சியின் முக்கியக் கொள்கையாகக் கருதி, அதன்படியே நடந்துவருகிறோம்.

இந்த இரு கொள்கைகளை லட்சியமாகக் கொண்டுதான், பா.ஜ.க-வும் செயல்படுவதால், அந்தக் கட்சியுடன் நட்பாக இருந்து வருகிறோம். தி.மு.க-வுக்கோ அல்லது அ.தி.மு.க-வுக்கோ நாங்கள் ஆதரவாக இல்லை. கமல் அரசியல் ஆர்வம் உடையவர். ஆனால் ரஜினியோ, பயந்த சுபாவம் உடையவர். இருவரும் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் இருவரும் தேவர் குருபூஜை விழாவுக்கு வந்தால், கட்சியின் சார்பிலும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவோம்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!