வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (04/08/2017)

கடைசி தொடர்பு:17:01 (05/08/2017)

ஓ.பன்னீர்செல்வத்தின் அவசரக் கூட்டம் ஏன்? அ.தி.மு.க-வை கைப்பற்ற அதிரடி ‘மூவ்’ #VikatanExclusive

ஓ.பன்னீர்செல்வம்

கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறார். தேர்தல் ஆணையத்திடமிருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான பதில்கள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க என்றவுடன், நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள் என்ற கேள்வியைத் தொண்டர்கள் கேட்க மறப்பதில்லை. சசிகலா அணி என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியா இல்லை தினகரனா என்று கேட்கின்றனர். தொண்டர்களிடம் மட்டுமல்ல, மக்களின் மனநிலையும் அப்படி மாறிவிட்டது. சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டிற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். சசிகலா மீதுள்ள வெறுப்பால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்திருந்தது. ஆனால், பிரதமர் மோடியுடன் அவர் காட்டிய நெருக்கத்தால், ஆதரவு குறையத் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார், தினகரன். இதற்காக அவர், 60 நாள் காலக்கெடு விதித்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் (ஆகஸ்ட் 4-ம் தேதி) முடிவடைகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதற்கு மாறாக, ஒருவர்மீது ஒருவர் பகிரங்கக் குற்றச்சாட்டுகளைச் சொல்லிவருகின்றனர். இதனால், இப்போதைக்கு இரண்டு அணிகளும் இணைய வாய்ப்பில்லை. 

ஓ.பன்னீர்செல்வம்

 ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து நேற்றிரவு அவரது ஆதரவாளர்களுக்கு அவசர போன் அழைப்பு பறந்துள்ளது. அதில், அனைவரும் சென்னைக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார். அந்தக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் வழங்கப்பட உள்ளதாம். 
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “அ.தி.மு.க-வில் ஒரு லட்சத்து 6,000 கிளைகள் உள்ளன. பத்து லட்சம் பேர் பொறுப்புகளில் உள்ளனர். மாவட்ட, நகர, பகுதி, ஒன்றியம் எனப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

ஏற்கெனவே செம்மலை, பொன்னையன், கே.பி.முனுசாமி, மதுசூதனன், பி.ஹெச். பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மாஃபா.பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வாதன், சண்முகநாதன், ஜெயபால், மனோஜ் பாண்டியன் ஆகிய 12 பேர் கொண்ட உயர் மட்டக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மற்ற பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதுதொடர்பாக ஆலோசிக்கத்தான் நிர்வாகிகள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டால், எங்கள் அணியின் பலம் அதிகரித்துவிடும்.  

ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் பதவி, கட்சியின் சின்னம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. நாங்கள் கொடுத்துள்ள அஃபிடவிட்டில், எங்களுக்கு சாதகமான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துவிட்டால், இரண்டு அணிகளும் இணைந்துவிடும். அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே இணைப்புகுறித்து பேசிவருகிறார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டல அமைச்சர்கள் அமைதியாக இருக்கின்றனர். ஆகஸ்ட் 5-ம் தேதி, கட்சித் தலைமை அலுவலகத்துக்கு தினகரன் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தினகரனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தடுக்கவில்லை என்றால், அவர்கள் நாடகமாடுவது தெரிந்துவிடும்" என்றனர்.

 ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடியாக, புரட்சித் தலைவி அம்மா அணி வலுப்படுத்தப்பட்டுவருகிறது. இதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் அதிர்ச்சியுடன் பார்த்துவருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களுக்கு, பதவிகள்குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்