ராஜ்யசபாவிலும் காங்கிரஸை வீழ்த்தி பெரிய கட்சியானது பாரதிய ஜனதா!

ராஜ்யசபாவிலும் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாகியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ராஜ்யசபா வரலாற்றில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் 245 உறுப்பினர்களில் 13 பேர் நியமன உறுப்பினர்கள் .

ராஜ்சபாவில் பெரிய கட்சியானது பாரதிய ஜனதா

 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றிகண்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, தற்போது மக்களவையில் 281 உறுப்பினர்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் (மாநிலங்களவை) நேற்று வரை பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்குத் தலா 57  உறுப்பினர்கள் இருந்தனர். மத்தியப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் சம்பதியா உகே, நேற்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். இதனால், மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. 

அடுத்த ஏப்ரல் மாதத்தில், மேலும் 57 எம்.பி-க்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. பெரும்பாலானாவை உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கான இடங்கள் அவை. இதில், நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பீகாரிலும் நிதிஷ் கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் 2018-ம் ஆண்டில் ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 

இந்தியாவில், 18 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அல்லது அந்தக் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 6 மாநிலஙகளில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சியில், பாரதிய ஜனதா கட்சிக்கு ராஜ்யசபாவில் 50-க்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!