வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (04/08/2017)

கடைசி தொடர்பு:19:14 (04/08/2017)

வாகனங்களுக்காக நெடுஞ்சாலையில் ஆசிட் ஊற்றப்பட்ட 500 மரங்கள்! - மனசாட்சியே இல்லையா அதிகாரிகளே?

தேனிமாவட்டத்தில் பசுமை கொஞ்சும் பல சாலைகளில் தேனி-பெரியகுளம் சாலையும் ஒன்று. பழைய பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சிவிளக்கு வரை சாலையின் இருபுறமும் வானுயர மரங்களைப் பார்க்கமுடியும். இன்று காலை, இச்சாலையில் தேனி போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்புறம் அருகில் இருந்த பழைமையான புளியமரம் ஒன்று வெட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற பத்திரிகையாளர்கள் ‘ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள்? யார் வெட்டச்சொன்னது?’ என்று கேள்வி எழுப்ப, ‘கனரக வாகனங்கள் செல்ல மரங்கள் இடையூறாக இருப்பதால் மரங்களை வெட்டுகிறோம்’ என்று பதில் கொடுத்தனர் நெடுஞ்சாலைத் துறையினர். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமேதான் கனரக வாகனங்களுக்கு சிட்டிக்குள் வர அனுமதியுண்டு. ஆனால், எந்த நேரமாக இருந்தாலும் கனரக வாகனங்கள் சிட்டிக்குள் வர ’ஸ்பெஷல்’ அனுமதி கொடுத்துவைத்திருக்கிறார்கள் தேனி மாவட்ட போக்குவரத்துத்துறையினர். மேலும் கனரக வாகனங்கள் சிட்டிக்குள் வராமல் இருக்க தேனிக்கு வெளியே புறவழிச்சாலைத் திட்டம் ஒன்று இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, சட்ட விரோதமாக, நேரம் காலம் பார்க்காமல் நகரத்திற்குள் வரும் கனரக வாகனத்திற்காக, நூறு வருட பழைமையான மரங்களை  நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டியது கண்டிக்கத்தக்கது.

ஆசிட்

கிளையை வெட்டாமல் மரத்தை வெட்டியது தவறு.!

அந்த வழியாகச் சென்ற தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, மரம் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து பேசியது மட்டுமல்லாமல், ’‘கனரக வாகனம் செல்வதை முதலில் முறைப்படுத்துங்கள், மரங்கள் இடையூறாக இருந்தால் அதன் கிளைகளை மட்டும் வெட்டிவிடலாமே, மரத்தையே வெட்டிச் சாய்ப்பது மிகப்பெரிய தவறு. மேலும் நெடுஞ்சாலைத் துறையினர் தேனியில் இருந்த பழைமையான மரங்களைச் சாலைப் பணிக்காக வெட்டிச் சாய்த்துள்ளனர். வெட்டப்பட்ட மரங்களுக்காகப் புதிய மரக்கன்றுகளை நட்டு, அவற்றை முறையாக பராமரித்து மரமாக்கியதில்லை. எனவே உடனே மரம் வெட்டும் பணியைக் கைவிடுங்கள். தேனி மாவட்டத்தில் சில இடங்களில் மரத்தை அப்புறப்படுத்துவற்காகவே சில விசமிகள் மரத்திற்கு ஆசிட் ஊற்றி கொல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, ஐநூறு மரங்களை ஆசிட் ஊற்றி கொன்றிருக்கிறார்கள். அவர்களை முதலில் களையெடுக்க வேண்டும். இருக்கும் ஒரு சில மரங்களாவது விட்டுவையுங்கள். மனிதர்களுக்கு ஆரோக்கியமான காற்றைக் கொடுக்கட்டும்.’’ என்று பேசினார்.

ஆசிட்

மரம் வெட்டியதை நிறுத்திய அதிகாரி.!

பத்திரிகையாளர்கள் மற்றும் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மரத்தை வெட்ட வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். அதனைக் கேட்ட சாலை ஆய்வாளர் சங்கீதா, மரம் வெட்டுவதை நிறுத்தச்சொன்னார். வெட்டப்பட்ட ஒரு மரத்தினை, சாலையிலிருந்து உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பாராட்டிய மக்கள்.!

சாலை ஓரம் கடைவைத்திருப்பவர்களும், குடியிருப்பவர்களும் பத்திரிகையாளர்கள் மற்றும் சக்கரவர்த்தியின் செயலைப் பாராட்டியது மட்டுமல்லாமல், ‘’நீங்கள் வரவில்லையென்றால் வரிசையாக ஐந்து மரங்களை வெட்டிச்சாய்த்திருப்பார்கள். எல்லாம் நூறு வருட பழைமையான மரங்கள். இந்தப் பகுதியே கலையிழந்து போயிருக்கும். உங்களுக்கு எப்படி நன்றிசொல்வது என்றே தெரியவில்லை.’’ என்று நெகிழ்ச்சியோடு பேசினர்.

முறையற்ற திட்டமிடல்.!

தேனி-பெரியகுளம் சாலையின் வலதுபுறம் நிறைய இடம் இருந்தும் முறையான திட்டமிடல் இல்லாமல், மரங்கள் சூழ்ந்திருக்கும் இடதுபுறம் சாலையை அகலப்படுத்தி, வாகனங்களுக்கு இடையூறாக மரம் இருக்கிறது என்று கூறி மரங்களை வெட்டுவது மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் திட்டமிடல் திறனை உணர்த்துவதாக உள்ளது. மரங்களுக்காகவும், வனவிலங்குகளுக்காகவும் இந்தியாவில் பல சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், தனியார் ஒப்பந்தக்காரர்களின் சூழ்ச்சியால் இருக்கும் சில மரங்களை அழிக்கும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட சாலையோர மரங்களைக் காப்பதற்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும். அதன்படி பழைமையான மரங்கள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.!


டிரெண்டிங் @ விகடன்