'ஊரணியைத் தூர்வாரக்கூடாது'! கடுகடுத்த அதிகாரி; கரிசனை காட்டிய கமிஷனர்

ஊரணி

மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு இளைஞர்கள் இடையே கலை, கலாசாரம், விவசாயம், நீர் நிலைகள் பாதுகாப்பு போன்ற சமூக அக்கறை வேரூன்றிக் கிடைக்கிறது. பெரிய அளவுக்கு எழுச்சி பெறாவிட்டாலும் ஆங்காங்கே மல்லிகை மொட்டுக்களாய் மதுரை இளைஞர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் பூத்துக்கிடக்கிறது. மதுரை  மானகிரி 44-வது வார்டு பகுதியில் அமைந்திருக்கும் ஊரணி ஒன்று 20 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியுள்ளது . கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை மாதத் திருவிழாவுக்கு மதுரை முழுக்க கூட்டம் அலைமோதும். அப்போதெல்லாம் தன் கையையும் கொடுத்து குடிநீருக்கு சற்றும் வறுமையில்லாமல் வழங்கியதில் மானகிரி ஊரணிக்கும் பங்குண்டு. இந்த ஊரணி தற்போது காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் நாதியற்றுக் கிடந்தது. அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் அதை மாற்றி அமைத்து தூர்வார தொடங்கியுள்ளனர். அதைப்பற்றி தெரிந்துகொள்ள எம்.பி.ஏ முடித்த மாணவன் நவீனிடம் பேசினோம்.

தூர்வாருதல்

''தெரிந்தோ தெரியாமலோ இந்த ஊரணியின் சீர்கேடுக்கு இப்பகுதி மக்களாகிய நாங்கள் காரணமாகிவிட்டோம். இந்த ஊரணியை தூர்வார எங்கள் பகுதி இளைஞர்களும் மாணவர்களும் , ஆர்வமுள்ள நபர்களும் தூர்வார முடிவு செய்தோம். பிறகு பண உதவிக்காக எங்களுக்கு தெரிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், எங்கள் பகுதி மக்கள் இப்படி எல்லாதரப்பிலும் சிறிதாக பணம் சேகரித்தோம்.  மாநகராட்சியில் தெரிவித்துவிட்டு கடந்த புதன்கிழமை ஊரணியை சுத்தம்செய்யத் தொடங்கினோம். நேற்று வேலை நடந்து கொண்டிருக்கும்போது, அதிகாரிகள் வந்து யாரைக் கேட்டு ஊரணியைத் தூர்வாருகிறீர்கள் என்று கேட்டனர். 'எதுவானாலும் எழுத்துபூர்வமா எழுதிக்கொடுங்கள்' என்று கூறி பணியை நிறுத்துவிட்டுச் சென்றனர் . அதைத் தொடர்ந்து மதுரை கார்ப்பரேசன் கமிஷனரிடம் முறையிட்டோம். 'கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசி பிரச்னையைத் தீர்த்து வைத்தார். மேலும், எங்கள் பணியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தற்போது இன்று மீண்டும்  தூர்வாரும் பணியைத் தொடங்கிவிட்டோம். பணிகள் முடிந்த பின் ஊரணியைச் சுற்றி பாரம்பர்ய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உள்ளோம்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!