மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்!

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மெரினா

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ஓர் எழுச்சிப் போராட்டம் நடைபெறக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அங்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. போராட அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதி மறுப்பது, மீறி போராடுபவர்களைக் கைது செய்வது என்று மெரினா கடற்கரையே காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தைக் கூட்டியதற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதனிடையே, இந்த வழக்கு விசாரணைக்காக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அப்போது, அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நீதிமன்றத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!