வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (04/08/2017)

கடைசி தொடர்பு:18:31 (04/08/2017)

சி.பி.எம் மாநிலக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று, மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

ஜி.ராமகிருஷ்ணன்


தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவுசெய்துள்ளது. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள் உட்பட அனைவரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்களாகச் சென்று இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,

விவசாய விளைபொருள்களுக்கு அடக்கவிலையோடு 50 சதமானம் சேர்த்து விலை தீர்மானிக்க வேண்டும், இந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும், 

விவசாயிகளது கடனைத் தள்ளுபடி செய்திட வேண்டும், 

ஜிஎஸ்டி மூலம் உயர்த்தப்பட்ட வரிவிதிப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், 

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற வாக்குறுதியை அமலாக்கிட வேண்டும்,

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும்,

2014 தேர்தலில் பா.ஜ.க அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றிட வேண்டும்,

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பை சீர்குலைக்க புகுத்தியுள்ள நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு வழங்கிட வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் தமிழ்நாட்டில் மரணங்கள் தொடர்கின்றன. இதற்கான சிறப்பு சிகிச்சை ஏற்பாடுகளை அனைத்து தாலுகா மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் உருவாக்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். 

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதயம், புற்றுநோய் உள்ளிட்ட சில முக்கிய மருத்துவப் பிரிவுகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும். 

மக்கள் பிரச்னைகளை வலியுறுத்திப் போராடியதற்காக பல்வேறு வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டும். 

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் இறுதி நாளான 2017 ஆகஸ்ட் 23 அன்று தமிழகம் முழுவதும், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்திட மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.