'நெய்வேலியில் நடந்தது கடலூர், நாகப்பட்டினத்திலும் நடக்கும்!' - பதற வைக்கும் பெட்ரோலிய மண்டலம்

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் அமையப்போகும் பெட்ரோலிய மண்டலங்களுக்கு எதிராகப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய, மாநில அரசுகளை நான்கு வாரங்களுக்குள்ளாகப் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

நெடுவாசல், கதிராமங்கலம் தொடர்ந்து தற்போது கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 45 கிராமங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையைக் கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது. 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெட்ரோலியம், ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலங்களுக்கான கொள்கை (Policy for Petroleum, Chemical and Petrochemicals Investment Regions) கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிராகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. 

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் வெற்றிசெல்வனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, 'கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருக்கும் 45 கிராமங்களில் இந்த பெட்ரோலிய மண்டலம் முதலீட்டைச் செய்யப் போவதாகவும் அதற்கு எதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது அரசிதழில் மட்டும் வெளியிடாமல் மக்களுக்குத் தெரியும்படியாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதை இந்த அரசாங்கம் செய்யவில்லை. அந்த உள்ளூர் மக்களுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் தெரியாத வகையில் இது திட்டமிட்டே செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, 'யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை, எனவே பெட்ரோலிய மண்டலங்களுக்கான முதலீட்டை இந்த
45 கிராமங்களிலும் செய்யப்போகிறோம்' என்று இப்போது அரசாணை அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் அங்கு ஏற்பட்டு வரும் பிரச்னைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இப்போது, கடலூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களையும் கபளீகரம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 26,000 ஏக்கரில் நடக்கும் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறது. காவிரி டெல்டா பகுதியைத் தொடர்ந்து இப்போது அடுத்த இரண்டு மாவட்டங்களையும் காலி செய்ய திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால், கையைவிட்டு நழுவிக் கொண்டிருக்கும் தமிழக உணவு தற்சார்பின்மை இன்னும் அதல பாதாளத்துக்குச் செல்ல உள்ளது. நெய்வேலியில் எப்படி விவசாயிகள் நிலத்தைக் கொடுத்துவிட்டு சாதாரண கூலி வேலைக்கு கையேந்தி நின்றார்களோ, அதே நிலைமை இந்த 45 கிராமங்களிலும் பெட்ரோலிய மண்டலங்கள் அமைக்கப்பட்டால் ஏற்படும்' என்றார் வேதனையோடு.                        
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!