வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (04/08/2017)

கடைசி தொடர்பு:18:43 (04/08/2017)

கட்சி அலுவலக படையெடுப்பு... தினகரன் மனநிலை என்ன?!

தினகரன்

அ.தி.மு.க அலுவலகத்துக்கு நாளை வருவதாக இருந்த அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தற்போதைக்கு அந்த எண்ணத்தை கைவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அ.தி.மு.க கடந்த 88-ல் சந்தித்த பிளவைவிட மோசமான பிளவை இப்போது சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சசிகலா பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறைசெல்ல நேர்ந்ததால் தனது அக்காள் மகன் டி.டி.வி. தினகரனை துணைப்பொதுச் செயலாளராக நியமித்தார். இதற்கிடையே, அவருக்கும் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே அதிகாரப் போட்டி எழுந்தது. கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தினகரனுடன் கைகோத்து செயல்பட்டனர். ஆனாலும், எந்த பிரச்னையுமின்றி ஆட்சி நடந்தது. இந்நிலையில், தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி சிறையிலிருந்து வெளிவந்த தினகரனை எடப்பாடி தரப்பு புறக்கணிக்க ஆரம்பித்தது. ஓ.பி.எஸ்ஸின் கோரிக்கைகளில் ஒன்றான சசிகலா குடும்பத்தை வெளியேற்றும் முடிவுக்கு எடப்பாடி தரப்பும் வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடுப்படைந்த தினகரன், சில தினங்களுக்கு முன் தன் ஆதரவாளர்களுடன் கலந்துபேசினார். அதன்படி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், கட்சியின் இரு அணிகளும் இணைய தான் அளித்த கெடு முடிவடைந்துவிட்டதால் மீண்டும் தானே கட்சியில் பொறுப்பு ஏற்று செயல்படுவேன் என்றும் அதற்காகத்தான் 5-ம் தேதி (நாளை) கட்சி அலுவலகத்துக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். தினகரனின் இந்த அறிவிப்பு எடப்பாடி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சிறைசென்றபின் தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்வார் என நினைத்திருந்த எடப்பாடி தரப்பு அதிர்ச்சியானாலும், தினகரனின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தினார். இது தினகரன் அணிக்கு அதிர்ச்சி தந்தது. 

கூட்டம் முடிந்தபின் பத்திரிகையாளர்கள் கட்சியை வழிநடத்துவது யார் எனக் கேட்டதற்கு அமைச்சர் ஜெயக்குமார், “ கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவது முதல்வர் எடப்பாடிதான் என அழுத்தமாக தெரிவித்தார். இது தினகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி தன் ஆளுமையை உருவாக்கிக்கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டு தன் ஆதரவாளர்களுடன் சந்தித்துப்பேசினார். இதற்கிடையே பெங்களுரு சிறையில் சசிகலாவுடனான சந்திப்பிலும் இதுகுறித்து தீவிரமாக பேசப்பட்டது என்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி

அதேசமயம் மத்திய அரசின் கவனத்துக்கும் தினகரனின் இந்த அறிவிப்பு சென்றபோது டெல்லி மேலிடம் இதை ரசிக்கவில்லை என்கிறார்கள். இதையடுத்து தினகரனுக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தினகரன் தன் ஆதரவாளர்களுடன் கலந்துபேசினார். இருக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் மத்திய அரசை இன்னும் கோபப்படுத்திக்கொண்டு இருப்பது நல்லதல்ல என அவர்களில் சிலர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. “பிரச்னையை நாமே சந்தித்துக்கொண்டு இருப்பதைவிட்டு முதலில் தொண்டர்களை சந்தித்து அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவோம். பின்னர் மத்திய அரசை பகைப்பதா, பணிந்து போவதா என்பதை முடிவு செய்வோம். இப்போதைக்கு  அந்த முடிவை தள்ளிவைப்போம்” என்பதாக சிலர் தெரிவித்தார்களாம். இது தினகரனை ரொம்பவே குழப்பியதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு அவரும் அவர்களின் முடிவை ஏற்றார் என்கிறார்கள். இதனால் இப்போதைக்கு கட்சி அலுவலகத்துக்கு வரும் முடிவை தள்ளிவைப்பார் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். 

இதுகுறித்த அறிவிப்பு எந்நேரத்திலும் தினகரனிடம் இருந்து வரலாம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

இன்னும் என்னென்ன திருப்பங்கள் வருமோ அ.தி.மு.க விவகாரத்தில்!?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்