வெங்காயத்தை திருடிய விநோத திருடன்!

பொள்ளாச்சி, காந்தி வாரச் சந்தையில் உள்ள வெங்காய மார்க்கெட்டில் நீண்ட நாள்களாக வெங்காய மூட்டைகளை  திருடி வந்த விநோதத் திருடனை, வெங்காய வியாபாரிகள் இன்று கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள காந்தி வாரச் சந்தையில் வெங்காயத்திற்கென்று பிரத்யேக மார்க்கெட் இருக்கிறது. அந்த மார்க்கெட்டில் சின்ன வெங்காயக் கடைகள், பெரிய வெங்காயக்கடைகள் இரண்டும் சேர்த்து மொத்தம் 47 கடைகள் இருக்கின்றன. கடந்த சில நாள்களாகவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடைகளில் வெங்காய மூட்டைகள் காணாமல் போயிருக்கிறது. வெங்காயக் கடையின் உரிமையாளர்கள், வெங்காய மூட்டைகளை திருடியது யார்? என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சி.சி.டிவி கேமரா இருந்த ஒரு கடையில் அந்த வெங்காயத் திருடன் நேற்று முன்தினம் திருடிக்கொண்டுபோக, அந்த சி.சி. டிவி ஃபுட்டேஜ்களை வைத்து அவனைக் கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள் வியாபாரிகள்.

புகார் கொடுத்திருக்கும் வெங்காய வியாபாரி ஞானப்பிரகாசத்திடம் பேசினோம், "பல நாள்களாகவே ஒவ்வொரு கடைகளிலும் வெங்காய மூட்டைகள் திருட்டு போய்க்கொண்டே இருந்தன. எவ்வளவோ முயற்சிசெய்தும் எங்களால் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு 4000 ரூபாய் மதிப்புள்ள வெங்காய மூட்டைகள் காணாமல் போய்க்கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு கடையில் இருந்த சி.சி.டிவி கேமராவில் ஒருவன் வெங்காயம் திருடும் காட்சி பதிவானது. அதன்மூலம் அவனைக் கண்டுபிடித்தோம். இன்று விடியற்காலை 3 மணிக்கு அவனை வளைத்துப் பிடித்தோம். முதலில் நான் திருடவே இல்லை என்று சொன்னான். போலீஸில் ஒப்படைத்தப் பிறகு ஒப்புக்கொண்டான். இப்போதுதான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது'' என்றார்.

வெங்காயத்தை திருடியவர் பொள்ளாச்சியை அடுத்துள்ள கூட்டம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!