திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதையால் தமிழகத்துக்கு என்ன நலன்?! | Is the approval by the Centre for Trivandrum-Kanyakumari double line for the sake of TN?

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (05/08/2017)

கடைசி தொடர்பு:14:55 (05/08/2017)

திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதையால் தமிழகத்துக்கு என்ன நலன்?!

 

ரயில் - இரட்டை வழிப்பாதை

மிழ்நாட்டில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி வெற்றிபெற்ற ஒரே மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி. பி.ஜே.பி கூட்டணியில் அப்போது இடம்பெற்றிருந்த பா.ம.க-வைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், தர்மபுரியில் வெற்றிபெற்றார். எஞ்சிய அனைத்து 37 தொகுதிகளிலும் அப்போது ஒன்றிணைந்து இருந்த அ.தி.மு.க-வே வென்றது.

இந்நிலையில்தான், அண்மையில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதையை மின்மயமாக்கப்பட்ட இரட்டைவழிப்பாதையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிவரை மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 86.56 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க ஆயிரத்து 553 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே 160 கி.மீ தூரப் பாதையையும் ‌மின்மயமாக்கப்பட்ட இரட்டைவழிப் பாதையாக மாற்றவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் செல்வோர், இன்னமும் பல இடங்களில் எதிர்த்திசையில் வரும் ரயில்களின் சிக்னல் கிடைத்து, அந்த ரயில்களுக்கு வழிவிடுவதற்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இன்னமும் நீடிக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சென்னை - கன்னியாகுமரி வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்றுவதுதான் என்று ஏற்கெனவே ரயில் பயணிகளும், பொதுமக்களும், ரயில்வே நிர்வாகமும் முடிவெடுத்து, அதற்கான ஆய்வுப் பணிகளும் நிறைவடைந்து விட்டன. ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை வழித்தடம், தென் மாவட்ட மக்களின் கனவாகவே நீடிக்கிறது.

ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்று, தற்போது மத்திய அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் உள்ளதால், அவரது தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டைவழிப்பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல், குறிப்பிட்ட பகுதியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற மத்திய அரசின் செயல், சில நேரங்களில் பயனற்றுப் போய்விடும் என்றும் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா.

ரயில் பாதை பற்றி கோபண்ணாஇதுகுறித்து அவர் கூறுகையில், "பொதுவாகத் திட்டங்கள் ஒதுக்கீடு என்பது மத்திய அரசு முடிவு செய்கிறது, தமிழகத்திலிருந்து செல்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான முயற்சியை மேற்கொள்கிற போது சிலநேரங்களில் பலன் கிடைக்கிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்.பி-யாகவோ, மத்திய அமைச்சராகவோ இருந்தால், அந்தப் பகுதி பலன் அடைவது இயல்பான ஒன்றுதான். அதாவது, கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அந்தத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும்போது, அந்தப் பகுதிக்குக் கூடுதல் நிதி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், நிதிப்பகிர்வு என்பது, விருப்புரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பொன். ராதாகிருஷ்ணன் எடுத்த முயற்சியின் காரணமாக, அந்தப் பகுதிக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கலாம். அதில், தவறேதும் இல்லை. ஆனால், வளர்ச்சி என்பது சமநிலைத் தன்மையோடு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட ஒருவருக்காக அவர் அந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்பதற்காக, அதிக நிதி ஒதுக்கீடு செய்வது மற்ற பகுதிகளின் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யும். அதனால,  மத்திய அரசைப் பொறுத்தவரை நிதி ஒதுக்குகிற போது எந்தப் பகுதிக்கு நிதி தேவையோ, அந்தப் பகுதிக்குத்தான் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர, நபர் சார்ந்து ஒரு முடிவை எடுக்கக்கூடாது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, ஆங்காங்கே முழுமையடையாமல், அகலப்படுத்தும் பணிகள் பாதியிலேயே உள்ளன. ஆங்காங்கே துண்டு, துண்டாக முழுமையடையாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதேபோல, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்பாதையும் முழுமையாக இன்னமும் இரட்டைவழிப் பாதையாக மாற்றப்படவில்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில்பாதை பணிகள் ஆய்வு மேற்கொண்டு, அதற்கான போதிய நிதி ஒதுக்கப்படாததால், அந்தப் பணிகள் பல வருடங்களாகச் செயலற்று, கிடப்பிலேயே உள்ளது. அப்படி இருக்கும்போது, ஒட்டுமொத்தமாகச் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்ப நிதி ஒதுக்கப்பட வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கும்போது அது சில நேரங்களில் பயனற்றுப் போய்விடும்.

எங்கே நிதி தேவையோ அங்கேதான் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர, அமைச்சர் அந்த ஊரில் இருக்கிறார் என்பதற்காக நிதி ஒதுக்குவது என்பது சரியான அணுகுமுறை கிடையாது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பத்தாண்டு கால ஆட்சியில், நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில், காங்கிரஸ் - தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்த காரணத்தால், அவர்கள் தொகுதி சார்ந்து என்றில்லாமல், குறிப்பிட்ட பகுதியை விடவும் தமிழ்நாடு முழுமைக்கும் ஒட்டுமொத்த மாநிலமும் பயன்பெறும் வகையில், மாநிலத்தின் நலன் கருதியே தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பல நெடுஞ்சாலைகள், கத்திப்பாரா மேம்பாலம் போன்ற பல மேம்பாலங்கள் எல்லாம் அப்படித்தான் அமைக்கப்பட்டன. சென்னையில் பல மேம்பாலங்கள் பலரும் பார்த்து வியக்கத்தக்க வகையில்தான், கொண்டுவரப்பட்டுள்ளன. தி.மு.க-வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அந்தத் துறையின் அமைச்சராக இருந்த காரணத்தினால், தமிழகத்திற்கு கூடுதல் பயன் கிடைத்தாலும், அவர் தொகுதி என்றில்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பலன் அளிக்கக்கூடிய வகையிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தொகுதி என்பதை விடவும் ஒட்டுமொத்த மாநில நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்" என்றார் அழுத்தமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்