சிக்கல்களிலிருந்து தப்பிப்பது எப்படி? - எடப்பாடி பழனிசாமிக்கு சில யோசனைகள்

இன்றைய தேதியில் தமிழகத்தில் நிம்மதி, நானோகிராம் அளவுக்குக் கூட இல்லாத ஒரே ஆள் எடப்பாடி பழனிசாமிதான். தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோரின் குடைச்சல்கள், போதாக்குறைக்கு அடிக்கடி உயர்நீதிமன்றம் வைக்கும் குட்டுகள், பிக் பாஸ் மத்திய அரசின் சித்து விளையாட்டுகள், மீடியா மற்றும் பொதுமக்கள் என இத்தனையையும் சமாளிக்கவேண்டிய கஷ்டகாலம் அவருக்கு. தனியாகக் கிடந்து அல்லல்படும் அவருக்கு உதவ சில டிப்ஸ்கள் தரலாமே எனத் தோன்ற லிஸ்ட் போட்டிருக்கிறோம். 

எடப்பாடி

* இவ்வளவு நெகட்டிவிட்டியையும் பாசிட்டிவ் அலையாக மாற்றினாலே நிம்மதி வாசல் தேடி வந்துவிடும். அதற்கு இருக்கவே இருக்கிறது மோடி மேஜிக். மோடி செய்ததைப் போலவே பதினொரு பேர் கொண்ட குழு அமைத்து 'ஈ.பி.எஸ் அமைச்சராக இருக்கும்போது ஒருநாள்' ரக வாட்சப் கதைகளைப் பரப்பிவிடலாம். 2011-க்கு முந்தைய எடப்பாடி தொகுதி, 2017-ல் எடப்பாடி தொகுதி என போட்டோஷாப் வித்தைகளை இறக்கி கெத்து காட்டலாம்.

* புரட்சிடா, போராட்டம்டா என உணர்ச்சிவசப்பட்ட தமிழன்தான் இன்று 'அம்மா ஜூலி, வாயைத் திறக்காதம்மா' எனக் கெஞ்சிக்கொண்டிருக்கிறான். சென்டிமென்ட்டில் கண் கலங்குவதில் நம்மாட்களை அடித்துக்கொள்ளவே முடியாது. எனவே சினேகன் ஸ்டைலில், 'என்னய்யா பண்ணேன் உங்களுக்கு? ரெஸ்ட்டே விடலையே எங்களுக்கு?' என சோக வீடியோக்கள் போடலாம். இப்படி காலை, மாலை இருவேளையும் ஒரு மண்டலத்திற்கு செய்துவந்தால் தமிழன் கண்ணீர் விட்டு கோயிலே கட்டிவிடுவான்.

* இதுவும் குருநாதர் மோடியின் வித்தைதான். 'ஒரு கோட்டை சிறுசா காட்ட அதுக்குப் பக்கத்துல பெரிய கோடு போடு' என்ற பார்முலா எவர்க்ரீனாக ஒர்க் அவுட்டாகும். எனவே, 'ஓவியாவை ஓரங்கட்டும் பிக் பாஸுக்குத் தடை', 'செயல்படாமலேயே இருக்கும் தமிழக அரசுக்குத் தடை'(?) எனத் திகுதிகு அறிவிப்புகளை வெளியிட்டால் மக்கள் ஈஸியாக திசைமாறிவிடுவார்கள். கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம். 

* செலவே இல்லாத சிம்பிள் வழி ஒன்று இருக்கிறது. ஆன்மிக வழிதான். பேசாமல் பழனிக்குப் பாதயாத்திரயோ, சபரிமலைக்கு மாலை போட்டோ கிளம்பினால், 'இப்ப தப்பா பேசுனா தப்பாயிடும்' என்ற பயம் சகலருக்கும் வந்துவிடும். சரி கொஞ்ச நாளைக்குப் பேசவேணாம் என அமைதி காப்பார்கள். அதற்குள் ரெஸ்ட் எடுத்து அடுத்த ரவுண்டிற்கு தயாராகி வந்துவிடலாம்.

* ஓவர்நைட்டில் ஒபாமா ஆகும் யோசனை இது. 'காஃபி வித் கமல்' என உலகநாயகனோடு ஒரு நேர்காணலுக்கு உட்கார்ந்துவிடலாம். 'சொல்லுங்க மைக்கேல் மதன காமராஜன், ஏன் நைட்டானா ட்வீட்டா போட்டு படுத்துறீங்க? உங்க வம்புதும்புக்கு நான் எப்பவாவது வந்துருக்கேனா?' என மனம்விட்டுப் பேசலாம். கமல் இளகிய மனதுக்காரர் என்பதால் சட்டென நெகிழ்ந்துவிடுவார். கமலே ஃபீல் பண்ணிட்டாரு எனத் தமிழகமும் ஈ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாகத் திரும்பிவிடும்.

* கடைசி ஐடியா இதுதான். எவ்வளவு முயன்றும் வேலைக்காகாவிட்டால் இம்சை அரசன் ஸ்டைல்தான். 'வெள்ளைக்கொடிக்கு வேலை கொடுங்கள்' எனக் கிளம்பி ஒவ்வொர் எதிரியின் வீட்டிற்கும் போகவேண்டியதுதான். அதுக்கப்புறம் அட்லீஸ்ட் நாங்களாவது நிம்மதியா இருப்போம் ஜி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!