வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (05/08/2017)

கடைசி தொடர்பு:13:32 (05/08/2017)

புஷ்கரம் திருவிழா : காவிரிக்கு அகல்தீபம் ஏந்தி ஆராட்டு!

குருபகவான், இந்தாண்டு காவிரி நதிக்குரிய துலாம் ராசிக்கு இடம்பெயர்வதால், காவிரி தோன்றும் கர்நாடகாவின் தலைக்காவிரி முதல் வங்கக் கடலில் முடியும் பூம்புகார் வரை புஷ்கரம் திருவிழா நடைபெறுகிறது. குறிப்பாக, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மகா புஷ்கரம் திருவிழா நடைபெறவுள்ளது.  

 நவ கிரஹங்களில் ஒன்றான குருபகவான், பிரம்மனை நோக்கிக் கடும்தவம் செய்து, பிரம்மனின் புஷ்கரத்தைக் கேட்டுப் பெற்றான். ஆனால், பிரம்மனைவிட்டு விலக விரும்பாத புஷ்கரம், ஆண்டுமுழுவதும் 12 ராசிகளில் குருபகவான் இடப்பெயர்ச்சி செய்யும் காலங்களில், அந்தந்த ராசிக்குரிய நதிகளில் பிரம்மா அருகே புஷ்கரம் எப்போதும் இருக்க வரம் பெற்றது. குருபெயர்ச்சி நாள்களில் சிவன், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உட்பட முப்பத்தி முக்கோடி தேவர்களும் அந்தந்த நதிகளில் வாசம்செய்வார்கள் என்பது ஐதீகம்.  

அதன்படி, குருபகவான் துலாம் ராசிக்குரிய காவிரி நதியில் எதிர்வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரவேசிப்பதால், காவிரி ஆற்றில், மயிலாடுதுறையில் மஹா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. அதிலும், காவிரி புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால், மகா புஷ்கரத்தில் நீராடுவது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. காவிரி தோன்றும் கர்நாடகாவின் தலைக்காவிரி, பாகமண்டலா, குஷால்நகர், ஸ்ரீரங்கப்பட்டினம் உட்பட கர்நாடகாவில் 11 இடங்களிலும், மேட்டூர் முதல் பூம்புகார் வரை தமிழகத்தில் 13 இடங்களிலும் காவிரி புஷ்கரம் விழா நடைபெறும் என்றாலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் வெகுசிறப்பாக மகா புஷ்கரம் திருவிழா நடைபெறவுள்ளது.  

முத்து 

இதுபற்றி புஷ்கரம் விழா கமிட்டி செயலாளர் முத்து கூறுகையில், ''காவிரி புஷ்கரம் நடைபெற உள்ள செப்டம்பர் 12-ம் தேதி, மயிலாடுதுறையில் துறவியர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.  இந்தியா முழுவதிலுமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட துறவிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். ஒரே நேரத்தில் அனைவரையும் தரிசித்து, அவர்களின் ஆசீர்வாதம் பக்தர்களுக்குக் கிடைப்பது பெரும் பாக்கியம்'' என்றார். 

அப்பர் சுந்தரம் 

புஷ்கர கமிட்டியின் துணைச் செயலாளர் அப்பர் சுந்தரம், ''காவிரியில் நீராட வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் உடைமாற்றிக்கொள்ள அறைகள், கழிப்பிட வசதி, குடிநீர்வசதி, அன்னதானம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்துவருகிறோம். அத்துடன், 12-ம் தேதி மாலை இருள்சூழும் நேரத்தில், அனைவரும் அகல்விளக்கை கைகளில் ஏந்தி, காவிரித் தாய்க்கு ஆராதனை செய்யும் கோலாகலக் காட்சியும் நடைபெற உள்ளது.  இந்த அற்புதக் காட்சியைக் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்''| என்று அழைப்பு விடுத்தார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க