’நான் கவிஞன்தான், அது என் கவிதை அல்ல!’ - சேரன் 

சேரன்

டிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா காமராஜர் சாலையிலிருந்து நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது. சிவாஜிக்கு சென்னையில் இருந்த ஒரே சிலை அவரது மணிமண்டபத்தில் முடங்கியிருப்பது குறித்து பலரும் தங்கள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், சிவாஜியின் தீவிர ரசிகரான இயக்குநர் சேரன் எழுதிய கவிதை என ஒன்று சமூக வலைதளங்களில் உலவியது. அதை சிவாஜி அபிமானிகள் மூலம் பலருக்கும் பகிரப்பட்டது. அந்தக் கவிதை விகடன் தளத்திலும் செய்தியாக்கப்பட்டது. 

ஆனால், அந்தக் கவிதை தன்னுடையதல்ல என இயக்குநர் சேரன் இப்போது தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். “நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகன் நான். தமிழ் திரையுலகின் சகாப்தம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது நினைவைப் போற்றும் வகையில் கடந்த நினைவு நாளன்று நான் ஒரு வீடியோவையும் வெளியிட்டேன். அது பெரும் பாராட்டுகளைப் பெற்றது. நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம் எனப் புகழ்பெற்ற அவரது சிலை மெரினாவிலிருந்து அகற்றப்பட்டது, எனக்கும் ஒரு ரசிகனாக எல்லோரையும்போல் வருத்தம்தான். ஆனால், இது நீதிமன்ற உத்தரவு என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன். 

சேரன்ஆனால், சில விஷமிகள் திட்டமிட்டு சிலை விவகாரத்தில் நான் எழுதியது போன்று ஓர் கவிதையை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். நான் கவிஞன்தான். ஆனால், இப்படிக் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நான் கவிதை எழுதியதில்லை... எழுதவும் மாட்டேன். எனக்கு ஆதங்கமாக இருந்தால் பொறுப்பான ஒரு படைப்பாளியாக அதை என் படைப்புகளில் வெளிப்படுத்துவேன். இப்படிக் குறுக்குவழியில் இறங்கமாட்டேன். நீதிமன்ற உத்தரவை விமர்சனம் செய்யும் அளவுக்கு சட்டம் தெரியாதவனுமல்ல நான். ஒருவேளை பிரபலமானவர் ஒருவர் பெயரில் கவிதை வெளியானால் அது பேசப்பட்டு அதன்மூலம் சிலை விவகாரத்தில் ஏதேனும் நல்லது நடக்காதா என நினைத்து யாரோ சிலர் ஆர்வக்கோளாறினால் இப்படி செய்திருக்கலாம் அல்லது என் வளர்ச்சியை விரும்பாத யாரோ திட்டமிட்டு செய்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். எப்படியானாலும் அதுபற்றி விசாரித்துவருகிறேன்.

அதனால் அந்தக் கவிதைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. மக்கள் என் மீதும் என் படைப்புகள் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்கள். அதைக் கெடுத்துக்கொள்ளும்படி எப்போதும் நான் நடந்துகொள்ள மாட்டேன்!” என்றவரிடம், அவரது அடுத்த படம் குறித்து கேட்டோம். “பேசிக்கொண்டிருக்கிறேன். சேரன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு நல்ல பெயரை எடுத்து வைத்திருக்கிறேன். அதனால் கவனமாகக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அப்படி ஒரு கதை குறித்த விவாதம் சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் நல்ல ஸ்கிரிப்டுடன் தமிழக மக்களைச் சந்திப்பேன்!” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!