30 ரூபாய்க்கு ‘எகோ கிச்சன்’ மீல்ஸ்..! ஒரு அடடே முயற்சி | Meals for 30 Rupees through Eco kitchen

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (05/08/2017)

கடைசி தொடர்பு:21:44 (05/08/2017)

30 ரூபாய்க்கு ‘எகோ கிச்சன்’ மீல்ஸ்..! ஒரு அடடே முயற்சி

ஈகோ கிச்சன்

ரு குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்குச் சமைத்துப்போடுவதற்குள்ளே அப்பாடா என்றாகிவிடும். ஆனால், 'நாளொன்றுக்கு எட்டாயிரம் பேருக்கு உணவு செய்கிறோம்' என்று வியக்கவைக்கிறார்கள், சென்னையின் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள 'எகோ கிச்சன்' நிறுவனத்தினர். இங்கே ஒரே சமயத்தில் 30,000 பேருக்கு உணவு தயார்செய்யும் வகையில் 18,000 ஸ்கொயர் ஃபீட்டில் விரிவான சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நாள்தோறும் எட்டாயிரம் பேருக்கு உணவுத் தயாராகும் இந்தச் சமையற்கூடம், பல இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்துள்ளது. இதுகுறித்துப் பேசுகிறார் ECO - Enhancing Community Opportunities நிறுவனத்தின் மேலாளர், 'எகோ' சேது லட்சுமி. 

சேது லட்சுமி ‘‘வறுமையில் இருக்கும், வருமானத்துக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது 'எகோ கிச்சன்'. காய்கறியும் மளிகைப் பொருள்களும் விற்கும் விலையில் இந்தக் குறைஞ்ச விலைக்கு எப்படி உணவை கொடுக்க முடியுது என்று கேட்கிறார்கள். எங்கள் டைரக்டர், மேனேஜிங் டிரஸ்டி, ஒய்.ஆர்.ஜி கேர் ஃபவுண்டர் சுனித்தி சாலமன் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டோம். அதன்படி, பயோமாஸ் பிரிக்கெட்ஸ் (Biomass briquettes)’ முறையைச் செயல்படுத்த என முடிவுசெஞ்சோம். எங்கள் நிறுவனத்தின் புராஜெக்ட் மேனேஜர் கணேஷ், தன் திட்டமிடலால் இதைச் சாத்தியமாக்கினார்'' என்கிறார் சேது லட்சுமி. 

அதென்ன பயோமாஸ் பிரிக்கெட்ஸ்? 

‘‘ 'பயோமாஸ் பிரிக்கெட்ஸ்' என்பது, சமையலுக்கான எரிபொருள். மரத்தின் வேஸ்ட், ஜுட் வேஸ்ட், வேர்க்கடலைத் தோல், உதிர்ந்த இலைகள், மாங்கொட்டை எனப் பல கழிவுப் பொருள்களை ஒரு மெஷினில் கம்ப்ரெஸ் செய்யும்போது, புட்டு போன்ற அமைப்பைப் பெறும். இந்த எரிபொருள், சுற்றுச்சூழலுக்கு எந்தவித சீர்கேட்டையும் விளைவிக்காது. எரிபொருளுக்காக அதிகச் செலவும் செய்யவேண்டியதில்லை. இதற்கான விலையும் மிகக் குறைவானது. எகோ கிச்சனைப் பொறுத்தவரை, தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேலாக இதைத்தான் பயன்படுத்துகிறோம். எரிபொருள் சார்ந்த செலவைக் குறைப்பது இந்த இடத்தில்தான். அதனால்தான் குறைந்த விலையில் உணவுத் தயாரித்துக் கொடுக்கிறோம். பல பெண்களுக்குத் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 

ஈகோ கிச்சன்

இங்கே தயாரிக்கப்படும் ஒரு மதியச் சாப்பாட்டின் விலை, ரூபாய் 30 மட்டுமே. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மதிய உணவை வாங்கிச்சென்று, தங்களுக்குச் சௌகரியமான ஏரியாவில், கூடுதல் விலைக்கு விற்றுக்கொள்ளலாம். இதிலும் குறிப்பிட வேண்டிய விஷயம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 35 மீல்ஸ் மட்டுமே கொடுக்கிறோம். ஒரு மீல்ஸுக்கு 10 ரூபாய் விலைவைத்து விற்றாலும், மூன்று மணி நேரத்தில் 350 ரூபாய் சம்பாதிக்க முடியும்'' என்கிறார் சேது லட்சுமி. 

இன்றையச் சூழலில், கணவனும் மனைவியும் வேலை பார்த்தால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறது. எனவே, வீட்டில் இருக்கும் பெண்கள், கணவரையும் குழந்தைகளையும் தயார்செய்து அனுப்பிய பிறகு, மூன்று மணி நேர உழைப்பைக் கொடுத்தால், தங்களின் மாத வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம். 

ஈகோ கிச்சன்

''எந்தத் தொழிலாக இருந்தாலும் முதலீடுதான் பிரச்னையாக இருக்கும். ஆனால், இங்கே பெரிய முதலீடு கிடையாது. அடுத்த நாள், உணவுக்கான தொகையை, முதல் நாள் கொடுத்து புக் செய்துகொள்ள வேண்டும். மயிலாப்பூர், மந்தைவெளி, ஜெமினி, சைதாப்பேட்டை எனச் சென்னையின் பல இடங்களில் இருக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழிருக்கும் பெண்களைத் தேர்வுசெய்து, இலவசப் பயிற்சி கொடுத்துள்ளோம். சாப்பாடு விற்பதற்கான ரோட்டோரக் கடைகளையும் இலவசமாக அமைத்துக்கொடுத்திருக்கிறோம். kiosk என்று அழைக்கப்படும் அந்தக் கடையை, சைக்கிள் ரிக்‌ஷாபோல டிசைன் செய்துள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு, பொருளாதாரப் பிரச்னையால் எங்களை அணுகும் சில ஆண்களுக்கும் இந்த வாய்ப்பை அளிக்கிறோம். இந்த உணவு விற்பனைக்காகப் பதிவுசெய்தல், பயிற்சி, பணி அமர்த்துதல் என மூன்று வார இலவசப் பயிற்சியை பெண்களுக்கு அளிக்கிறோம். ஆயிரத்து ஐம்பது ரூபாய் முதலீடும் மூன்று மணி நேரம் உழைப்பும் இருந்தால், தினமும் 350 ரூபாய் சம்பாதிக்கலாம்'' என்று புன்னகைக்கிறார் சேது லட்சுமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்