வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/02/2011)

கடைசி தொடர்பு:17:59 (17/05/2018)

18% இதயம்... 100% அன்பு!

ந.வினோத்குமார்
படங்கள் :கே.ராஜசேகரன்

'ஸ்மைல் பிங்கி’ படம் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? உதட்டுப் பிளவுடன் பிறந்த பிங்கி பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை. காரணம், மற்ற குழந்தை கள் இவளின் குறைபாடுகொண்ட முகத்தைப் பார்த்துக் கேலி செய்யலாம் என்பதால். முகத்தைச் சீரமைக்கும் அறுவை சிகிச்சை செலவை அவளது பெற்றோர்களால் சமாளிக்க முடியாது. ஒரு சூரியோதய நாளில், ஏதோ ஒரு கிராமத்தில் நடைபெற்ற உதட்டுப் பிளவுஉள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சை கிடைக்கப் பெறுகிறாள் பிங்கி. புன்னகை மிளிரும் பிங்கியின் முகத்துடன் படம் முடியும். இது ஒரு உண்மைக் கதையும்கூட!

 அப்படி உதட்டுப் பிளவுடன் பிறந்த பல 'பிங்கி’களுக்கு இலவச அறுவை சிகிச்சை மூலம் எதிர்கால வாசல் திறந்தவர் டாக்டர் ஷரத் குமார் தீட்ஷித். 1968-ல் முதன்

முதலாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை இந்தியாவில் செயல்படுத்தியவர், அதுவும் இலவசமாக!

சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்தித்தபோது, கையசைத்து அருகில் வரச் சொல்கிறார். காதுக்கு நெருக்கமாகத் தன்னைச் சாய்த்துக்கொண்டு, ''80 வயசாச்சு!'' என்கிறார். அதற்கு மேல் குரலில் காற்றுதான் வருகிறது. தொண்டையில் இருக்கும் துவாரத்தைச் சுற்றி ஒரு பேண்டேஜ் சுற்றப்பட்டு இருக்கிறது. தன் இடது கையால் அந்த துவாரத்தை கழுத்துப் பகுதி சதையுடன் சேர்த்துப் பிடித்து மெதுவாக, மிக மெதுவாக ஒவ்வொரு வார்த்தையாகப் பேசுகிறார். ''1982-ல் தொண்டைப் புற்றுநோய் என் ஃப்ரெண்ட்!''- மென்மையாகச் சிரிக்கிறார். உடல் மெள்ள நடுங்குகிறது. கொஞ்சம் முனகலுடன் வீல்சேரில் விஸ்தாரமாகச் சாய்ந்து கொள்கிறார். ''ஒருநாள் வழக்கம்போல கார்ல போய்க்கிட்டு இருந்தேன்... க்ஷ்... க்ஷ்... 1978-ல் எந்த மாதம்னு சரியாத் தெரியலை... எப்படிச் சம்பவித்தது... ஒண்ணுமே புரியலை. கார் விபத்தில் உடலின் வலது புறம் செயல்இழந்துவிட்டது. அன்று முதல் வீல்சேரில் தான் என் பயணம்!''- சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்.

''உடலின் ஒரு பக்கம் முழுக்கச் செயலிழந்த பிறகு, மூன்று வருடங்கள் படுக்கையில் இருந்தேன். அந்த மூன்று வருடங்களில் ஒரு குழந்தைக்குக்கூட என்னால 'க்ளெஃப்ட் லிப்’ அறுவை சிகிச்சை செய்ய முடியாத கவலைதான் என்னை உருக்குலைத்துவிட்டது. கொஞ்சம் உடம்பு தேறின பிறகு, இடது கையால் அறுவை சிகிச்சை செய்யப் பழகினேன். இப்பவும் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரைக்கும் சுமார் 150 உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சைகளை என்னால் மேற்கொள்ள முடியும். இறைவனுக்கு நன்றி. க்ஷ்... க்ஷ்..!'' 1988-ல் முதல் ஹார்ட் அட்டாக். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு, 1994-ல் இரண்டாவது அட்டாக்! மூன்று விரல்களைக் காட்டி, ''அத்தனை பைபாஸ் பண்ணிக்கிட்டேன்!'' அன்று முதல்இவருடைய இதயம் 18 சதவிகிதம் மட்டுமே உழைத்துக் கொண்டு இருக்கிறது. இத்தனை துயரங்க ளுக்கு மத்தியிலும் குழந்தைகளுக்கான சிகிச்சையை அவர் நிறுத்திக்கொள்வதாக இல்லை.

சுமார் 42 ஆண்டுகளாக இந்தியா முழுக்க முக்கியமாக, பின்தங்கிய மாநிலங்கள் முழுவதும் பயணித்து, சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் ஷரத் குமார் தீட்ஷித். தமிழகத்துக்கு இது முதல் வருகை.

பத்மஸ்ரீ விருது பெற்ற இவரது பெயர், இதுவரை 12 முறை நோபல் அமைதி விருதுக்காகச் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.

''தன் முகம் அவலட்சணமாக இருக்கிறதே என்று தினம் தினம் தேம்பும் குழந்தைகளின் கஷ்டத்தைவிட என்னுடைய கஷ்டங்கள் எதுவும் பெரிதில்லை. அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைப்பதே நான் உயிர்வாழ்தலின் லட்சியம்!'' என்று என் கை அழுத்திச் சொல்கிறார் டாக்டர் தீட்ஷித்!


டிரெண்டிங் @ விகடன்