''அ.தி.மு.க-வில் இப்போது நடப்பதெல்லாம் நாடகம்தான்!'' - போட்டுடைக்கிறார் ஈ.ஆர். ஈஸ்வரன்

ப்ரேக்கிங் நியூஸ்களால் மறுபடியும் ஊடகத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க அணிகள். 'கட்சிக்கும் ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை' என்று அமைச்சர்கள் அறிவித்த அடுத்த நொடியே, அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை அறிவிக்கிறார் டி.டி.வி தினகரன். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிறார்.

'ஓவியாவுக்கு என்னதான் ஆச்சு?' என்று விடைதெரியாமல் அவஸ்தைப்பட்டு வரும் தமிழக மக்கள் மத்தியில், 'இப்போது அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?' என்ற குழப்பக் கேள்வியும் சேர்ந்துள்ளது.

இந்த நிலையில், ''அ.தி.மு.க-வில் இப்போது நடப்பதெல்லாம் நாடகமே...!'' என்று அதிர்ச்சி தருகிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்

இதுகுறித்துப் பேசும் அவர், '' 'சசிகலா, டி.டி.வி தினகரனை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்வார். 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்றும்கூட சொல்வார். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் நீதிமன்றத்துக்கு மட்டும் போகவேமாட்டார். இவர் இப்படியென்றால், எடப்பாடி பழனிசாமியோ, 'சசிகலா, டி.டி.வி தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்' என்பார்.  ஆனால், தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்யும்போது, 'அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா' என்றுதான் தாக்கல் செய்வார். ஆனால், வெளியில் வந்து மறுபடியும் வேறொன்றைப் பேசுவார்கள்.  தீபாவும்கூட போயஸ்கார்டனுக்கெல்லாம் போவார். சொத்துகள் எல்லாம் எனக்குத்தான் உரிமை என்பார். ஆனால், கோர்ட்டுக்கு மட்டும் போகமாட்டார். இவை எல்லாமே ஒட்டுமொத்தமாக இவர்கள் நடத்தும் நாடகம்தான். 

அ.தி.மு.க அணிகளைச் சேர்ந்த இவர்கள் அனைவருமே ஊடகத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக திட்டமிட்டு நடத்துகிற நாடகம்தான். தனித்தனி அணி என்பதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான். அவர்களது செயல்பாடுகளை வைத்துதான் நான் இப்படியொரு கருத்தைக் கூறுகிறேன். 

'சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரையும் அ.தி.மு.க-விலிருந்து நீக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்வாரேயொழிய, எந்த மேடையிலும் அவர்கள் செய்த தவறுகளைப் பற்றிப் பேசுவதே கிடையாது. அதுமட்டுமல்ல... 'நீக்க வேண்டும்' என்று மட்டுமே சொல்வார்; மற்றபடி 'ஏன் நீக்க வேண்டும்' என்ற காரணத்தைக்கூட இதுவரை சொன்னது இல்லை. ஆகவே, இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மொத்தமாகவே இவை அனைத்தும் நாடகம்தான் என்பது எனக்கு ஊர்ஜிதமாகிறது. 

தினகரன் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி

இதுபற்றிப் பேசுபவர்கள்கூட '5-ம் தேதி என்ன நடக்கும் என்று மட்டும் பாருங்கள்' என்று சஸ்பென்ஸ் வைத்துப்பேசுகிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். 5-ம் தேதி ஒன்றும் நடக்காது. தமிழக அரசியலில், தி.மு.க-வை தூரப்படுத்துவதற்கான முயற்சியாகத்தான் இவர்கள் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், இப்போது உள்ள அ.தி.மு.க ஆட்சி கலைந்துபோனால், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது தி.மு.க-தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே தி.மு.க-வை தூரப்படுத்துவதற்கான முயற்சியை செய்துகொண்டிருக்கிறார்கள். 

நீங்களே பாருங்களேன்.... ஊடகத்தில், 24 மணி நேரமும் 'ஓ.பி.எஸ்-ஸா? ஈ.பி.எஸ்-ஸா? தினகரனா?' என்பது பற்றிய செய்திகள்தான் ஓடிக்கொண்டே இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட இந்த 3 அணியினருமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். ஆனால், எல்லோருமே சசிகலா தலைமையில்தான் இயங்குகிறார்கள். நான் இப்படி சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. சமீபத்தில், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்காக செய்யப்பட்ட முறைகேடுகள் பற்றி ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ இதுவரை எந்தக் கருத்தாவது சொல்லியிருக்கிறார்களா? இவர்கள் இருவருக்குமே சசிகலா வேண்டாதவர்தானே? அப்படியென்றால், இந்த விவகாரம் பற்றி கமெண்ட் பண்ணுவதற்குக்கூட இவர்கள் தயங்குவது ஏன்? அப்படியென்றால் மொத்தமும் நாடகம்தானே?

ஏன் இப்படியொரு நாடகத்தை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் சில காரணங்களே பதில்களாக இருக்கின்றன. அதாவது, இன்றுவரையிலுமே பொதுமக்கள் சசிகலாவையும் டி.டி.வி தினகரனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் மத்தியில் இருக்கும் இந்த எண்ணத்தை மாற்றுவதற்கும், பிரச்னையை திசை திருப்புவதற்குமே இப்படியான அரங்கேற்றங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சசிகலா

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதேகூட, அவருக்கு எப்போதெல்லாம் ஒரு சரிவுநிலை ஏற்படுகிறதோ... அப்போதெல்லாம் சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பார். மக்களும்கூட, 'நடவடிக்கை எடுத்துவிட்டார்' என்று சமாதானம் ஆகிவிடுவார்கள். நிலைமை எல்லாம் சரியானதும், மறுபடியும் சசிகலா குடும்பத்தை தன்னோடு சேர்த்துக்கொள்வார் ஜெயலலிதா. இந்த பாணியைத்தான் இப்போது இவர்களும் பின்பற்றுகிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும்கூட யாரோ ஒரு கிளைச் செயலாளரோ அல்லது அமைச்சரோ தவறு செய்தால்கூட எடப்பாடி பழனிசாமியால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்.... வருமான வரித்துறையின் தொடர் விசாரணையில் இருக்கிறார். சொத்துகளை எல்லாம் அப்போதே முடக்கிவிட்டார்கள். இந்த விவகாரம் எல்லாம் அமலாக்கத்துறைக்கும் போய்விட்டது. எந்த நிமிடத்திலும் அவர் கைதாகலாம் என்ற சூழ்நிலை. ஆனால், இப்போதுகூட இந்த அரசாங்கம் அவர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் வகித்துவரும் மந்திரி பதவியில் இருந்துகூட அவரை நீக்கவில்லை. இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? இதுதான் 'அம்மா வழியில் நடக்கிற ஆட்சியா?'. ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படித்தான் ஆட்சி நடத்தியிருப்பாரா?

இப்போது உள்ள சூழ்நிலையில், எப்படியாவது சரிக்கட்டி இந்த ஆட்சியைத் தொடர்ந்துவிடவேண்டும் என்றுதான் எல்லோரும் பார்க்கிறார்களே தவிர... தமிழ்நாட்டின் நன்மையைக் கருதி இவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆதலால், அ.தி.மு.க-வில் இப்போது நடப்பதெல்லாமே நாடகம்தான்!'' - என்று உரத்த குரலில் சொல்லிமுடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!