வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (06/08/2017)

கடைசி தொடர்பு:13:20 (06/08/2017)

''மானியத்துக்குத் தேவையில்லாத சூழலுக்கு இந்தியா முன்னேறுகிறது!’’ எரிவாயு சிலிண்டர் குறித்து ஹெச்.ராஜா

 

 

''மானியத்துக்குத் தேவையில்லாத சூழலில் நாடு நகர்கிறது'' என்று எரிவாயு சிலிண்டர் மானியப் பிரச்னை குறித்து பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

'வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்பட்டுவரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக ரத்து செய்யப்படும்' என்று மத்திய அரசு அறிவித்தது. அதனை அமல்படுத்தும் நோக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் நான்கு ரூபாய் உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இது, ஏழை நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரக் ஓ பிரையன் கூறுகையில், ''சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்குவது என்பது மத்திய அரசின் சமூகப் பொறுப்பு. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்ட நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்துவதை ஏற்க முடியாது" என்றார். மார்க்சிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ''பிரதமரின் வேண்டுகோளை ஏற்று லட்சக்கணக்கானோர் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். ஏழைகளுக்கும், மானியம் தேவைப்படுவோருக்கும் மானியம் வழங்க வேண்டியது அரசின் கடமை'' என்றார்.

ஸ்டாலின்

 

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று முதலில் அறிவித்து, பிறகு வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று கெடு விதித்து, இப்போது அந்த மானியத்தையும் ரத்துசெய்ய மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது, தாய்மார்களை ஏமாற்றி, ஏழை - எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிவைக்கும் செயல். ஏற்கெனவே ஜூலை 2016 முதல் மாதந்தோறும் சிலிண்டருக்கு இரண்டு ரூபாய் ஏற்றப்பட்ட விலையை, இனி ஜூலை 2017-ல் இருந்து மாதந்தோறும் நான்கு ரூபாய் விலையை ஏற்றிக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மார்ச் 2018-க்குப் பிறகு வெளிமார்க்கெட்டில் உள்ள விலையைக் கொடுத்துத்தான் கேஸ் சிலிண்டர்களைத் தாய்மார்கள் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது வேதனையளிக்கிறது. மக்களுக்குச் சேவை செய்யவே ஆட்சிகளே தவிர, மக்களை வதைத்து வாட்டுவதற்காக அல்ல என்பதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு உணர வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

சிலிண்டர்

 

பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், ''சமையல் எரிவாயு மானியம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 2014-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி நிலவரப்படி 14.2 கிலோ மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூபாய் 1,026 என்று இருந்தது. அதுவே, இன்று 564 ரூபாய். எனவே, 2018-ம் ஆண்டு ஏப்ரலில் மானியம் இல்லாமலே உபயோகிப்பாளர்களுக்கு ரூபாய் 564-க்குச் சிலிண்டர் கிடைக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் சிலிண்டருக்கு ரூபாய் 460 என்ற அளவுக்கு விலை குறைந்துள்ளதுபோல், 2018-ம் ஆண்டு ஏப்ரலுக்குள் இந்த 564 ரூபாயும் இன்னமும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, மானியத்துக்குத் தேவையில்லாத சூழலை நோக்கி நாடு நகர்ந்துகொண்டுள்ளது என்பதே உண்மை. 

ராஜா

 

மானியம் என்பது ஏழைகளுக்குத் தாங்க முடியாத அளவில் ஒரு பொருளின் விலை இருக்கும்போது அவசியமாகும். காங்கிரஸ் ஆட்சி இருந்தவரை... அதாவது, 2014 மே 1-ம் தேதிவரை வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,026 ஆக இருந்தது. எனவே, நடுத்தர குடும்பத்தினருக்கும் மானியம் தேவைப்பட்டது. ஆனால், இன்று அதுவே ரூ.564 ஆக விலை குறைந்துள்ளது. எனவே, நடுத்தர மற்றும் மேல் நடுத்தர மக்களுக்கு மானியம் தேவையில்லை. மேலும், 2018 ஏப்ரலுக்குள் மானியம் இல்லா சிலிண்டர் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

 

தற்போது, மானிய எரிவாயு உருளையின் விலை ரூ. 477.46 ஆக உள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.86.54 மானியம் வழங்குகின்றன. இந்த ரூ.477.46 விலையோடு மாதந்தோறும் ரூ.4  உயர்த்தப்படும். சமையல் எரிவாயு உருளையின் மானியம் பூஜ்யம் என்ற அளவுக்கு வரும் வரையிலோ அல்லது 2018 மார்ச் மாதம் வரையிலோ இதில் எது முன்பு வருகிறதோ அதுவரை என்று குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூபாய் 510-க்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

 

இதுவரை 18,11,87,794 வாடிக்கையாளர்கள் மானிய சிலிண்டர் பெறுகின்றனர். இதில், இரண்டு கோடி ஐம்பது லட்சம் பேர், பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு இலவசமாகச் சமையல் எரிவாயு வழங்கப்பட்டவர்களாவர். 2019-க்குள் ஐந்து கோடி ஏழைப் பெண்களுக்கு இந்தத் திட்டம் மூலம் சிலிண்டர் வழங்கப்படும். இவர்களுக்கு முழுத்தொகையும் மானியமாகும். இதன்மூலம் மாதத்துக்கு ரூ. 33,840 கோடி மானியம் வழங்கப்படும். 

 

எனவே, மானியம் இல்லா சிலிண்டர் விலை வெகுவாகக் குறைந்துவரும் சூழ்நிலையில் ஐந்து கோடி ஏழைகளுக்கு 33,840 கோடி மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தவும், வசதி பெற்றவர்கள் வெகுவாகக் குறைந்துவிட்ட சந்தை விலையை ஏற்றிடும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் பாடுபட்டுவரும் மத்திய அரசின் செயல் பாராட்டுக்குரியது. மோடி அரசு ஏழை மக்களின் நலன் பேணும் அரசாகும்'' என்று குறிப்பிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்