தனுஷ்கோடி அரிச்சல் முனைப் பகுதியில் தூய்மைப் பணி!

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் தூய்மை பணி


ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம்-அரிச்சல்முனை இடையே 53 ஆண்டுகளுக்குப் பின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் போடப்பட்ட புதிய சாலையை பிரதமர் மோடி கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த புதிய சாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள், யாத்திரீகர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதி வரை தங்களது சொந்த வாகனத்திலேயே செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் ராமேஸ்வரத்துக்கு வரும் ஆயிரக்கணக்கானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதி வரை சென்று கடலின் அழகை ரசித்து வருகின்றனர். இதுவரை கடற்கரையில்  ஒதுங்கும் கழிவுப் பொருள்கள் மட்டுமே குப்பைகளாகக் கிடந்து வந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏராளமான கழிவுப் பொருள்கள் அப்பகுதியில் வீசப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திய தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பாலித்தீன் பைகள் கடலில் கலப்பதன் மூலம் இப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

இதனைத் தடுப்பதற்காகவும், அரிச்சல்முனைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம், பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர், ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வேர்க்கோடு புனித ஜோசப் பள்ளி, ராமநாதபுரம் செய்யதம்மாள் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்ற தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

இப்பணியில் வருவாய் கோட்டாட்சியர் பேபி, நகராட்சி ஆணையர் தனலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஐயப்பன், அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயகாந்தன், பசுமை ராமேஸ்வரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி மற்றும் தனுஷ்கோடி பகுதி மீனவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!