வாஸ்துவுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற மாவிலைகள் | Mango leaves suitable for vasthu and health

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (05/08/2017)

கடைசி தொடர்பு:17:50 (05/08/2017)

வாஸ்துவுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற மாவிலைகள்

மாவிலைகள்தோரணங்கள் கட்டி விழாவைக் கொண்டாடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கம். வாழை, கமுகு, தென்னம் கீற்று, மாவிலைகளால் தோரணம் கட்டுவது இன்றும் நமக்குள்ள வழக்கம்தான். அதில் மாவிலைத் தோரணம் மிகவும் சிறப்பானது. மாவிலைகள் அலங்காரத்துக்கு மட்டுமின்றி, சிறந்த கிருமி நாசினியாகவும் உள்ளது. மாவிலையில் லட்சுமி தேவி இருக்கிறாள் என்பதால் அது சிறப்பான இடத்தை பூஜையில் பிடிக்கிறது.

மாவிலைத்தோரணம் தொடங்கி, பூஜைக் கலசம் வரை மாவிலை முக்கிய இடம் வகிக்கிறது. வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம். வாஸ்து பகவானுக்குப் பிடித்த இலையான மாவிலை வாஸ்துவைச் சீராக்குகிறது. மேலும், வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை இவை நீக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக் காற்றை தூய்மையாக்கும். வாசலில் உலவும் அஸ்வினி தேவதைகளின் காதில் அமங்கல வார்த்தைகள் விழாது தடுக்கும் சக்தி மாவிலைக்கு உண்டு என்கிறார்கள். மாவிலை காய்ந்தாலும் அதன் அதிர்வுகள் குறையாது என்பதால் நிலைகளில் பூஜைகளில் இவை எப்போதும் பயன்படுகிறது. 

மாவிலைகள்

அழுகவே அழுகாத மாவிலைகள் வாழ்வின் நித்தியத்தை உணர்த்துவதாகப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதனாலேயே சகல பூஜைகளிலும் கும்ப நீரை மாவிலைகளால் தெளிக்கிறார்கள். காய்ந்து போனாலும் அழுகவே அழுகாத இந்த மாவிலைகளைத் தற்போது பிளாஸ்டிக்கில் வாங்கிக் கட்டித் தொங்க வைத்திருப்பது வேடிக்கையானது மட்டுமல்ல; வேதனையானதும்கூட. எனவே மாவிலைகளைத் தொங்கவிட்டு மங்கலம் பெறுவோம். வாஸ்து பகவானின் பேரருளைப் பெறுவோம்.