தினகரன் அறிவிப்பால் பன்னீர்செல்வம் அணியில் குழப்பமா?- முனுசாமி விளக்கம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி தினகரன் அணி என்று செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, அணிகள் இணைவதற்கு டி.டி.வி. தினகரன் 60 நாள்கள் அவகாசம் வழங்கியிருந்தார். அந்த அவகாசம் நேற்றுடன் முடிந்திருந்தது. இதையடுத்து, அ.தி.மு.க அம்மா அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் தினகரன்.

முனுசாமி


மேலும், பிரிந்து சென்றவர்கள் இணைவார்கள் என்றும் தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக, பன்னீர்செல்வம் அணி சார்பாக வருகின்ற 10-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, "போராட்டம் நடத்துவதற்காக காவல்துறையிடம் முறையாக அனுமதிக் கோரியுள்ளோம். எங்களது போராட்டம் கேலிக்கூத்தானது என்று தி.மு.க கூறியுள்ளது. அப்படிப்பார்த்தால், தி.மு.க நடத்தும் அத்தனைப் போராட்டங்களும் கேலிக்கூத்துதான். தினகரனின் அறிவிப்பால், எங்கள் அணிக்குள் குழப்பம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, டி.டி.வி தினகரன் கட்சியில் இல்லாதவர். ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!