கழுத்தை நெரிக்கும் வருமான வரித்துறை..! விஜயபாஸ்கர் சிக்கலுக்கு என்ன காரணம்? | What's the reason behind vijayabhasker's raising issue?

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (05/08/2017)

கடைசி தொடர்பு:19:41 (05/08/2017)

கழுத்தை நெரிக்கும் வருமான வரித்துறை..! விஜயபாஸ்கர் சிக்கலுக்கு என்ன காரணம்?

விஜயபாஸ்கர்

நாட்டில் வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை தமிழக சுகாதாரத்துறைக்கு உண்டு. துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருமே டாக்டர்கள். இப்படி ஒருஜோடி, சுகாதாரத்துறைக்கு அமைவது மிகவும் அபூர்வம். அப்பேற்பட்ட பெருமைக்குரிய துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போது வருமான வரித்துறையின் ரெய்டு மற்றும் வரிசைகட்டும் சம்மன்களால் விழிபிதுங்கி நிற்கிறார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, சசிகலாவின் குடும்பத்துக்கு நெருக்கமாக தன்னை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர் இவர். அ.தி.மு.க அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் செல்லப்பிள்ளையாகத்தான் ஆரம்பத்தில் இருந்தார் விஜயபாஸ்கர். உள்கட்சி அதிகார மோதலில் ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்து சென்றதும் அவர் சசிகலா பக்கம் நின்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக விஜயபாஸ்கர் சுற்றிச்சுழன்று பணியாற்றினார். ஆனால், அந்த நேரத்தில் திடீரென்று அவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதுபோன்ற ஆவணங்களில் சில ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டது. அந்த ஆவணங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் பெயர்களில் ரூ.89 கோடிக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்காக குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. 

அமைச்சர்களின் பெயர்கள் சிக்கியதால், அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போது தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தன. கூட்டணிக் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது. வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விஜயபாஸ்கரும், சரத்குமாரும் விளக்கம் அளித்தனர். 
ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களுக்கும் விரிவடைந்தது அனைவரும் வருமான வரித்துறை அதிகாரிகள் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். விஜயபாஸ்கரின் மனைவி உட்பட அவரது குடும்பத்தினருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது. 

'டிவி'க்களுக்கு கசிந்ததே ஆரம்பம்!

விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து கைப்பற்றபட்ட ஆவணங்களை வருமான வரித்துறை கசிய விட்டதே, விஜயபாஸ்கருக்கு நெருக்கடி கொடுக்கத்தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் புலம்பினர். அவருடைய பணப்பரிவரத்தனை ஆவணங்களை கசியவிட்டது குறித்து வருமான வரித்துறையினரும் மறுப்பு சொல்லாமல் மௌனம் காத்தனர். குறிப்பாக, விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற முனைப்பு, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இருந்தாகச் சொல்லப்பட்டது.  இதனால், அதிகாரிகள் விஜயபாஸ்கரை தொடர்ந்து விரட்டத் தொடங்கினர். 

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

பின்னணியில் ஓ.பி.எஸ்!

விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறையின் விரட்டலுக்கு ஓ.பி.எஸ் தரப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். “சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்று முதலில் வந்து சொன்னதே விஜயபாஸ்கர் தான்” என்று ஓ.பி.எஸ் குற்றம்சாட்டினார். காரணம், விஜயபாஸ்கர் சசிகலா குடும்பத்தினரிடம் காட்டிய நெருக்கம் ஒ.பி.எஸ் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எந்த இடத்திலும் லாபி செய்வதில் கெட்டிக்காரான விஜயபாஸ்கர், அ.தி.மு.க.வின் அடுத்த சக்தியாக உருவாகப் போகிறார் என்று கணக்குப்போட்டனர் ஓ.பி.எஸ் தரப்பினர். ஆர்.கே நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக அனைத்து அஸ்திரங்களையும் கையில் எடுத்தார் விஜயபாஸ்கர். இது ஒ.பி.எஸ் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியதுடன், விஜயபாஸ்கருக்கு எதிரான ஆவணங்களை வருமான வரித்துறையினரிடம் புகாராக அளிக்கத் தூண்டியது. ஓ.பி.எஸ். தரப்பு அளித்த புகார் மனுவைத் தொடர்ந்தே,  விஜயபாஸ்கருக்கு எதிராக டெல்லியில் வியூகங்கள் வகுக்கப்பட்டு, வருமான வரித்துறையின் ஆட்டம் விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடங்கியது..

அமைச்சர் பதவியிலிருந்து நீக்குங்கள்!

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்ற அன்றே சரத்குமார் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. ஆனால். சரத்குமார் மற்றும் சீதாலெட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை, இந்தளவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கவில்லை. ஆனால், விஜயபாஸ்கருக்கு இதுவரை நான்குமுறை சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொழிலதிபர் சேகர் ரெட்டி முதல் ஆர்.கே.நகர்  பணப்பட்டுவாடா வரை பல்வேறு புகார்கள், பல அமைச்சர்கள் மீது எழுந்த போதிலும், அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற நெருக்கடிகள் கொடுக்கப்படவில்லை. அந்தப் புகார்கள் அனைத்தும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே உள்ளன.

அதேபோல் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைவதற்கு ஒ.பி.எஸ் தரப்பில் வைக்கப்படும் நிபந்தனைகளில் ஒன்று, விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்பதுதான். ஆனால், அணிகள் உடைந்தபோது, ஆட்சியைக் காப்பற்றியதில் முக்கியப் பங்கு விஜயபாஸ்கருக்கு உள்ளது என்பதால், அந்த நன்றிக்கடனுக்காக அவரை நீக்க மறுத்துவிட்டாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால், சட்ட சிக்கலை ஏற்படுத்தி அவர் பதவிக்கு நெருக்கடியை உண்டாக்கும் வேலைதான் இப்போது நடந்துவருவதாகத் தெரிவிக்கின்றனர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர்.

சட்ட ரீதியாக நிருபிப்பேன்!

ஆனால், இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் விஜயபாஸ்கரோ “எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் வருமானவரித்துறையினர் நெருக்கடி கொடுத்து, சோதனை நடத்தினர். சம்மனும் அனுப்பபட்டது. நான் சட்.டத்துக்கு உட்பட்ட குடிமகன் என்ற முறையில் காலதாமதம் இன்றி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை சட்டரீதியாக நிருபிப்பேன். வருமான வரித்துறையின் நடவடிக்கையை அரசியல் நெருக்கடியாகப் பார்க்கவில்லை. ஆனால், தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என்மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்திவருவது கண்டிக்கதக்கது” என்றார்.

 


டிரெண்டிங் @ விகடன்