வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (05/08/2017)

கடைசி தொடர்பு:18:22 (05/08/2017)

குசால் மெண்டிஸ் அதிரடி சதம்: தோல்வியைத் தவிர்க்க இலங்கை போராட்டம்!

இந்திய அணி இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று  டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அருமையாக விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஃ ​​பாலோ ஆன் தந்தார் கேப்டன் கோலி. 

குசால் மெண்டிஸ்

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்த பிறகு அதிரடியாக ஆடியது. குறிப்பாக குசால் மெண்டிஸ் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 135 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி நேர்மறை எண்ணத்துடன் ஆடியதால் இலங்கை அணி விறுவிறுவென ரன்களை குவித்தது. இன்றைய தினம் ஆட்டம் முடிய ஆறு ஓவர்கள் இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் மெண்டிஸ் அவுட் ஆனார்.  

ஆட்ட நேர இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்திருக்கிறது இலங்கை. அந்த அணியின் பேட்ஸ்மேன் கருணரத்னே  200 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்கிறார். இப்போதைக்கு 230 ரன்கள் பின் தங்கியிருக்கிறது இலங்கை. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கவே பெரும் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருக்கும் சூழ்நிலையில் நாளைய தினம் இலங்கை ஏதாவது மேஜிக் இன்னிங்ஸ் ஆடுமா எனப் பார்ப்போம்.