வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/08/2017)

கடைசி தொடர்பு:18:18 (05/08/2017)

'ஓவியா விவகாரத்தில் உண்மை தெரியணும்!' - போலீஸ் கமிஷனரிடம் சென்ற புகார்

'பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கிய ஓவியா விவகாரத்தில் உண்மை தெரிய வேண்டும்' என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்டப் பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி மனு கொடுத்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்ட பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி கொடுத்த புகார் மனுவில், "விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4-ம் தேதி (நேற்று) இரவு 9 மணியளவில் நடிகை ஓவியா என்ற ஹெலன், நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் காட்சி வெளியானது. மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், "பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் கேமரா மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. கடந்த 4-ம் தேதி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா மூழ்குவதைப்போல காட்சி வெளியானது. அவர், மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது. அவரது மனஅழுத்தத்துக்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவி நிர்வாகம் ஆகியோர் காரணமாகக் கருதப்படுகின்றனர். எனவே, இந்தச் சம்பவத்தில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஆர்.பி. அதிகரிக்க இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால்தான் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.