வெளியிடப்பட்ட நேரம்: 10:09 (07/08/2017)

கடைசி தொடர்பு:10:09 (07/08/2017)

500க்கும் மேற்பட்ட வீடியோக்களால் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

அரசுப் பள்ளி

கணக்கு என்றாலே பலருக்கு வேப்பங்காய் போல கசக்கும். ஆனால், கணக்குப் பாடத்தையே சுவையாக நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் ரூபி கேத்தரின் தெரசா. நாமக்கல், திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் ரூபி கேத்தரின் தெரசா. கணித ஆசிரியரான இவர், கணிதத்தில் கடினமான பகுதிகளையும் எளிமையாக நடத்துவதில் கைதேர்ந்தவர். இவரைப் பற்றி இன்னொரு வியப்பூட்டும் செய்தி இருக்கிறது! பாடங்களை வீடியோக்களாக நடத்துகிறாராம். அது குறித்து அவரிடம் கேட்டோம். 

"அரசு வேலைக்கு வருவதற்கு முன் சுமார் 18 ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினேன். 2007 ஆம் ஆண்டுதான் அரசுப் பணி கிடைத்தது. சேலத்திலும் பின் முளைச்சூரில் பணியாற்றி இப்போது இந்தப் பள்ளிக்கு வந்திருக்கிறேன். அரசுப் பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகள் மிகவும் எளிமையான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள். அவர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்குக் கல்விதான் அடித்தளம். அந்தப் பொறுப்புஉணர்வை நான் மனதளவில் உணர்ந்துகொண்டேன். 

மாணவர்கள் பாடத்தின் எந்தப் பகுதியைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவார்களோ அந்தப் பகுதியை எளிமையாக்க வேண்டும் என்பதாக என் பணியை அமைத்துக்கொண்டேன். உதாரணமாக, பல மாணவர்களுக்கு வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்யமுடியாமல் கஷ்டப்படுவர். அவர்களுக்காக புதுவிதத்தில் வாய்ப்பாட்டைக் கற்பித்தேன். என் மாணவர்கள் செய்யும் எஃப் ஏ செயல்பாட்டை வீடியோவாக எடுத்துக்கொள்வேன். முரளிதரன் எனும் ஆசிரியர் வாட்ஸ் அப்பில் கணிதக் குழு வைத்திருப்பதாக நண்பர்கள் வழியே கேள்விப்பட்டேன். அதில் என்னையும் இணைத்துக்கொண்டார்கள். அதில் என் வீடியோக்களைப் பதிந்தபோது பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டுகள் வந்தன. எனக்கே இது ஆச்சர்யமாக இருந்தது. 

இதற்கு முன் நான் பணியாற்றிய பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கரும்பலகைகள் இல்லை. அதனால், ஒரு வகுப்பில் நான் நடத்தும் பாடங்களை வீடியோ எடுத்து, அடுத்த வகுப்பில் போட்டுக்காட்டுவேன். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் இது சாத்தியமானது. அந்த வீடியோக்களை வாட்ஸ் அப் குரூபில் பதியவும் அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் பல குரூப்களிலும் சேர்த்துவிட்டார்கள். இப்போது 30க்கும் மேற்பட்ட குரூப்களில் வீடியோக்களைப் பதிந்துவருகிறேன். 

யூ டியூப்பில் சேனல் ஆரம்பித்து, அதில் வீடியோக்களைப் பதிந்தால் இன்னும் அதிகமானவர்களைச் சென்றடையும் என்றனர். அதனால், என் பிள்ளையின் உதவியுடன் யூ டியூப் சேனல் ஆரம்பித்தேன். இப்போது உலகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிக்கின்றன. எனக்குப் பெரிய அளவில் தொழில்நுட்பம் எல்லாம் தெரியாது. நான் பாடம் நடத்தும் என் மாணவிகள்தாம் எனது செல்போனில் வீடியோ எடுப்பார்கள். அதிலும் சென்ற வருடத்தில் ரம்யா எனும் மாணவி ரொம்பவே ஆர்வமாக வீடியோ எடுத்தாள். பள்ளியில் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பதால் சிம் இல்லாத மொபைலையே பள்ளியில் வீடியோ எடுக்கப் பயன்படுத்துகிறேன். சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் தொடர்புகொண்டு சந்தேகங்களைக் கேட்கின்றனர். அயன் கார்த்திகேயன் என்பவர் ஒரு ஆப் தயார் செய்யலாம் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். 

என் நோக்கம், பாடம் எளிமையாக மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இந்த வீடியோக்களைப் பார்த்து அதில் கூறப்படும் முறையில் தங்கள் பள்ளியில் பாடம் நடத்துவதாகப் பல ஆசிரியர்கள் கூறும்போது நான் செல்லும் பாதை சரியானதாக இருக்கிறது என்கிற மகிழ்ச்சி. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் என்னைச் சென்னைக்கு அழைத்துப் பாராட்டினர். 

என்னைப் பொறுத்தவரை என் குழந்தைகளைப் போலத்தான் என்னிடம் படிக்க வருகிற மாணவர்களைப் பார்க்கிறேன். அப்படித்தான் ஆசிரியர்கள் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அந்த எண்ணமே மாணவர்களை உயர்த்துவதற்கான வேலைகளைச் செய்ய வைத்துவிடும்." என்று மாணவர்களின் மீது அக்கறையோடு கூறுகிறார் ஆசிரியை ரூபி. 

இவர், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்ககாவே தனி வலைப்பூ வைத்திருக்கிறார். இதுவரை 520 வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்கள் வழியே பகிர்ந்து வருகிறார். அவற்றில் சில ஒரு லெட்சம் வியூஸைத் தொட்டிருக்கின்றன.

 

 

மாற்றம் விதைக்கும் ஆசிரியர்களின் பணிக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

 


டிரெண்டிங் @ விகடன்