வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (05/08/2017)

கடைசி தொடர்பு:20:26 (05/08/2017)

திருச்சியை எளிதாக வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் # TNPLUpdates

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. இந்த மாதம் 20-ம் தேதியுடன் இரண்டாவது சீசன் நிறைவடைகிறது. தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, சென்னை, மதுரை, கோயமுத்தூர், காரைக்குடி, திருவள்ளூர் என எட்டு நகரங்களின் சார்பாக எட்டு அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை விளையாட வேண்டும். 

பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கும் லீக் சுற்றில் இன்று மாலை நான்கு மணிக்கு நடந்த போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இது இந்த சீஸனின் 17-வது மேட்ச் ஆகும். 

ரூபி திருச்சி வாரியர்ஸ்

திருநெல்வேலியில் இன்று நடந்த மேட்சில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்றது. அந்த அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜாமணி ஜேசுராஜ், மூர்த்தி பிரபு ஆகியோரின் கிடுக்கிப்பிடி பௌலிங்கில் திண்டுக்கல் அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின் வெங்கடராமன் அதிகபட்சமாக 34 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் விளாசி 41 ரன்கள் குவித்தார். ஆர் விவேக்கின் கடைசி நேர அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 154 ரன்கள் குவித்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. 

155 ரன்கள் என்ற ஓரளவு எளிதான இலக்கை திருச்சி வாரியஸ் சேஸிங் செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள்  சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்துக்கொண்டே இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 17 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் வெறும் 131 ரன்களை மட்டுமே திருச்சி வாரியர்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது திண்டுக்கல் டிராகன்ஸ்.