திரண்ட அரசு ஊழியர்கள்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

அரசு ஊழியர்கள் போராட்டம்

மிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் (JACTTO-GEO) பல்லாயிரக்கணக்கானோர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என போராட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் தங்களின் குறைகளை கோஷங்களாக எழுப்பினர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்பில் நடந்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்ற நிலையிலும் வாலாஜா சாலையில் இருந்து மெரீனா பீச் வரை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் வாகனங்களில் வந்துக்கொண்டிருந்த ஊழியர்களை திருப்பி அனுப்பும் முயற்சியும் தமிழக அரசு எடுத்திருந்தது. 

ஆனாலும் காலை முதலே ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியர்களும், மற்ற அரசு ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்துக்கொண்டே இருந்தனர். இதனால் வாலாஜா சாலை, காமராஜர் சாலை முழுவதும் போக்குவரத்து நகரமுடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.போராட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் "ஓய்வூதியம் என்பது வயதான காலத்தில் அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் நாங்கள் வாழ உதவியாக இருந்தது. ஆனால் அரசு எங்களின் ஓய்வூதியத்தை 2003 -ம் ஆண்டிலிருந்து நிறுத்திவிட்டது. அதனால் மீண்டும் அரசு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தற்போது போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். எங்களின் முக்கிய கோரிக்கையே 2003 க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தவேண்டும் என்பது. இதை பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழு ஏற்கெனவே உருவாக்கப்பட்டது. அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையை பெற்று அனைத்துப் பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றனர்.

அரசு ஊழியர்கள் போராட்டம்

மேலும் அவர்கள் பேசுகையில், “எங்களுக்கு சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை அரசு தர வேண்டாம். இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, நாங்கள் ஓய்வுபெற்ற பின் யாரையும் சாராமல் வாழ ஒய்வூதியம் கொடுத்தாலே போதும். கடந்த பல ஆண்டுகளாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு பல்வேறு போராட்டங்களை செய்து பார்த்துவிட்டது. ஆனால் அரசு இதை ஒரு பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளவில்லை. போராட்ட நேரத்தில் மட்டும் எங்களை அழைத்து பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் அதன் பிறகு அதுபற்றி மறந்துவிடுகிறார்கள். இப்படி அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத அரசின் கவனத்தை ஈர்க்கவும், பழைய ஓய்வூதியம் திரும்ப கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். இவற்றை வலியுறுத்திதான் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறோம். அரசு இதையும் கண்டுகொள்ளாவிட்டால் எங்கள் போராட்ட வழிமுறைகளை மாற்றுவோம்" என்றனர்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்குமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!