வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (05/08/2017)

கடைசி தொடர்பு:21:50 (05/08/2017)

விபசார தொழில் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

திருச்சி மாநகரப் பகுதிகளில் விபசார தொழில் செய்த ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகரப் பகுதிகளில் மணி என்கிற வீரமணி என்பவர் தொடர்ந்து பெண்களை கட்டாயப்படுத்தி விபசார தொழில் நடத்தி வந்தார். மேலும், கடந்த 12-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு திருச்சி, கே.கே.நகர், ஓலையூர் ரோட்டில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த திருச்சி ராமலிங்க நகரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரை, கமல் பாஷா, அன்வர், மணி என்கிற வீரமணி மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் விபசாரத்துக்கு அழைத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மணி என்கிற வீரமணி உள்ளிட்டோர்மீது விபசார தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் மணி என்ற வீரமணி தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வீரமணி கடந்த 17-ம் தேதி தஞ்சாவூரிலிருந்து திருச்சி வந்து டி.வி.எஸ் டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த தகவல் கிடைக்க, திருச்சி மாநகர விபசார தடுப்புப் பிரிவு போலீஸார் அவரை கைதுசெய்தனர். அவர்களின் விசாரணையில், மணி, கல்லணையைச் சேர்ந்த உமாவை திருமணம் செய்துகொண்டு அவருடன் சேர்ந்து திருச்சி மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் தனியாக வீடு எடுத்து பல பெண்களை வைத்து விபசார தொழில் செய்துவருவதாகவும், ராஜேஸ், லோகநாதன்; கமல் பாஷா மற்றும்  அன்வர் ஆகியோருடன் சேர்ந்து விபசார தொழில் செய்துவந்ததாகவும், தனக்கு தில்லைநகர், அரசு மருத்துவமனை மற்றும் கே.கே.நகர் ஆகிய காவல் நிலையங்களில் விபசார வழக்கு உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, தொடர் குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், மணி என்கிற வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டுள்ளார்.  

இதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் மணி என்கிற வீரமணிக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணை வழங்கப்பட்டது. இதனால் மணி என்கிற வீரமணி ஒரு வருட கடுங்காவல் தண்டனை அனுபவிப்பார் என்கிறார்கள் காவல்துறையினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க