வெளியிடப்பட்ட நேரம்: 02:52 (06/08/2017)

கடைசி தொடர்பு:17:24 (12/07/2018)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்..! அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு

கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கவேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

             

கரூர் மாவட்டத்தில் வரும் 4.10.2017 அன்று நடைபெறவுள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடக்க இருக்கும் இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்கள் பணியே மகேசன் பணி என்று மக்களின் நலன் காக்க பாடுப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சாதனைகளையும், நாட்டு மக்களுக்காக அவர் வகுத்தத் திட்டங்களையும் எதிர்காலச் சந்ததியினர் தெரிந்துகொள்ள ஏதுவாக, அவரது நூற்றாண்டு விழா முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. கரூர் மாவட்டத்தில் இச்சிறப்புமிக்க இவ்விழா எதிர்வரும் 4.10.2017 அன்று நடைபெற இருக்கிறது. அதில்,தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.

இவ்விழாவில், கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடிவினா கருத்தரங்கம், மனோதத்துவ அறிவு புகட்டும் நிகழ்ச்சிகள், பெண்களுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகள், பயனாளிகளுக்கு அனைத்து அரசுத் துறைகளின் வாயிலாக அனைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க ஏதுவாக திருமாநிலையூர் அரசு போக்குவரத்துமனை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூய்மைப்பணி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விழாவில் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.