முதலமைச்சரின் மூன்றாவது அணி ! விழிபிதுங்கி நிற்கும் அ.தி.மு.க. தொண்டன்

முதலமைச்சரின் மூன்றாவது அணி

.தி.மு.க.வில் அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி என்று இரண்டு அணிகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத இன்னொரு அணியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி என்ற மூன்றாவது அணியும் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வில் அம்மா அணிக்கு சசிகலா பொதுச்செயலாளர், டி.டி.வி. தினகரன் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.  இந்த அணியின் அவைத்தலைவராக அமைச்சர் செங்கோட்டையன் இருக்கிறார். புரட்சித்தலைவி அம்மா அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆள் இல்லை. பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவைத்தலைவராக மதுசூதனனும் இருக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தபின்  சட்டமன்றக்குழுத் தலைவராக சசிகலாவை எம்,எல்.ஏ-க்கள் தேர்வுசெய்தனர்.  ஓ.பன்னீர்செல்வத்தால் ஆபத்து நேரிடலாம் என்று, எம்,எல்.ஏ-க்கள் மொத்தபேரும், கூவத்தூர் சொகுசு விடுதிக்கு கொண்டு போய் வைக்கப்பட்டனர். கூவத்தூரில் அவர்களோடு அன்று அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தங்கியிருந்தார். அவ்வளவு தூரம் எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்றியும், முதலமைச்சராக முடிசூடும் தருணத்தில்தான் ஊழல்வழக்கில் கைதாகி சசிகலா சிறைக்குப் போனார். அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி. தினகரனும் கைதாகி சிறைக்குப் போனார். சிறைக்குப் போன சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்  மட்டும் மீண்டும் முதலமைச்சராகக் கூடாது என்பதில்  உறுதியாக இருந்தார். பன்னீர்செல்வம் இடத்தில் யாரை  உட்கார வைப்பது என்பதிலும் சசிகலா  முன்னதாகவே ஒரு முடிவை எடுத்திருந்தார்.  அந்த வகையில் மீண்டும் எம்.எல்.ஏ-க்கள் ஒன்றுகூடி சசிகலா சொல்படி, 'யார் அடுத்த முதலமைச்சர்' என்ற ஆவணத்தில் கையெழுத்துப் போட்டனர். அப்படி அனைவரும் போட்ட கையெழுத்தால், கூவத்தூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.  அன்றைய தினத்தைப் பொறுத்தவரை, சசிகலா- தினகரன் ஆகியோரின் ஆதரவை யார் பெற்றிருந்தாலும் அவரே முதலமைச்சர் என்ற நிலை இருந்தது.

 சசிகலாவும், தினகரனும் அடுத்தடுத்து  சிறைக்குப் போன பின்னர் கட்சியில் அவர்களின் மவுசு குறையத் தொடங்கியது. அதிகார மையம் என்ற வார்த்தையே தொலைந்து அங்கே ஒரு இடைவெளி விழுந்தது.  இதன் பின்னர் அமைச்சர்கள் தனித்தனியே அறிக்கை, பேட்டிகளில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டனர்.  சட்டசபையில் முதலமைச்சரின் மாண்பையும், மொத்தமாக அமைச்சர்கள் காற்றில் பறக்க விட்டனர். ஒரு கட்டத்தில் சபாநாயகர் தனபால், "முதலமைச்சர் பதவிக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. இனி மாண்புமிகு முதலமைச்சர் என்று மட்டும்  அவையில் குறிப்பிட்டால் போதுமானது. அதுதான் சரியானதும் கூட. ஒவ்வொரு உரையின் போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே என்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களிடம் நேரடியாகவே கடிந்து கொண்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்  சசிகலா- தினகரனுக்கு அடுத்த சிக்கல் உருவாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்று என்று  கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் இப்போது சசிகலா- தினகரன் ஆதரவு நிலையில் இல்லை. நேற்றுவரை ஓ.பன்னீர்செல்வத்தோடு மோதிய சசிகலா குடும்பத்தினர், இப்போது எடப்பாடி பழனிசாமியோடு மல்லுக்கு நிற்க ஆரம்பித்துள்ளனர். சசிகலா தரப்புக்கு ஆதரவாக சிலர் பேசுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாகவும் சிலர் பேசுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் யாரும் இல்லை என்றாலும், அவர்கள் சசிகலா- தினகரனை சூடேற்றுவதுபோல் நேரடியாகவே கருத்துக் கூறி வருகின்றனர்.  அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி ஆகிய இரண்டு அணிகள் இணைப்பே ரப்பர்போல் இழுத்துக் கொண்டிருக்கும் வேளையில் எடப்பாடி பழனிசாமியின் மூன்றாவது அணியும் களத்தில் இருப்பதுதான் கட்சியின் அடிமட்டத் தொண்டனை குமுறலில் விட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!