வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (06/08/2017)

கடைசி தொடர்பு:10:08 (07/08/2017)

'இனி அம்மா புராணமும் எடுபடாது.. அப்பா புராணமும் எடுபடாது!

 

I.Periyasamy

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி, "டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சலுக்கு இதுவரை கிட்டத்தட்ட இருபது பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், ஆளும் அ.தி.மு.க அரசு, டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் ஒரு செயல்படாத அரசாக  இருக்கிறது. அதேப்போல, குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதைச் சரிசெய்ய வேண்டிய அரசும், அமைச்சர்களும் எந்த அணியில் இருப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் உள்கட்சி பிரச்னையையும் தீர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளையும் தீர்க்கவில்லை. அமைச்சர்கள் பெயரில் ஊழல் பட்டியல் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், முதலமைச்சர் எதையும் கண்டுக்கொள்வதில்லை. மாறாக, எதிர்க்கட்சியான தி.மு.க செய்யும் மக்கள் நலப்பணிகளுக்கும் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள். தானும் படுப்பதில்லை...தள்ளியும் படுப்பதில்லை என்ற எண்ணத்தில் உள்ளது எடப்பாடி தலைமையிலான செயல்படாத தமிழக அரசு. பதவி மற்றும் வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவே இந்த அரசு செயல்படுகிறது. மக்களின் மேல் எந்த அக்கறையும் காட்டாமல் வஞ்சம் செய்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மீதான அடுக்கடுக்கான புகார் மீதான எந்த நடவடிக்கை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. செயல்படாத முதலமைச்சர் தலைமையில் தமிழகம் தத்தளித்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அம்மா புராணம் பாடி இந்த அரசு பொதுமக்களை வஞ்சித்து வருகிறது. இனி தமிழகத்தில் அம்மா புராணமும் எடுபடாது, அப்பா புராணமும் எடுபடாது.  உடனடியாக இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க