கட்டடங்களுக்கு உடனே உரிமம் பெறவில்லை என்றால்..?


 

"உரிமம் பெறாமலோ, காலாவதியான உரிமத்துடனோ பொதுக்கட்டடங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், மேற்படி கட்டடத்தை பயன்படுத்த தடை விதிப்பதோடு, அந்த கட்டட உரிமையாளர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.

மேலும், இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,"தமிழ்நாடு பொதுக்கட்டடங்கள் (உரிமம்) சட்டம் 1965ன் படி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் (பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகள் உள்பட), நூலகங்கள், சங்கங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், விடுதிகள், சத்திரங்கள், ஆஸ்பத்திரிகள், நர்சிங்ஹோம், மருந்தகங்கள், பல்வேறு மையங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சமுதாய நலக்கூடங்கள், பொதுக்கூட்டங்கள், விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டடங்கள், மதரீதியான வழிப்பாட்டுக் கூடங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்துவிதமான தனியார் மற்றும் பொது கட்டடங்களும், மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் மற்றும் தரைத்தளம் 100 சதுர மீட்டர் (1074 சதுர அடி) கொண்ட பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுக் கட்டடங்களும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இதுநாள் வரை உரிமம் பெறவில்லை என்றால், அதற்கான உரிமம் பெற படிவம்-ஏ விண்ணப்பத்துடன் உரிமம் கட்டணம் செலுத்தியதற்கான அசல் செலுத்துச்சீட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் பெறப்பட்ட கட்டட உறுதித்தன்மைக்கான சான்று படிவம்-பி, அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம், தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையிடம் பெறப்பட்ட சான்று, மின் இணைப்பு பெற்ற ஆணை நகல், உள்ளாட்சி நிர்வாகத்திடம் வரி செலுத்தியதற்கான ரசீது ஆகியன இணைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

 மேலும், கட்டடம் உரிமம் பெற மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் இயங்கும் கட்டடங்களுக்கு கரூர் வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு கரூர் வருவாய் கோட்டாட்சியரிடமும், குளித்தலை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு குளித்தலை வருவாய் கோட்டாட்சியரிடமும் வரும் 16.8.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே, கட்டட உரிமம் பெற்றவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல் எந்தக் கட்டடத்தையும் பொதுக் கட்டடமாக பயன்படுத்தக் கூடாது. உரிமம் பெறாமலோ அல்லது காலாவதியான உரிமத்துடனோ பொதுக்கட்டடங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், மேற்படி கட்டடத்தைப் பயன்படுத்தத் தடை விதிப்பதுடன், கட்டட உரிமையாளர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!